லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்த 'லியோ' திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றதோடு வசூல் வேட்டையையும் தரமாக செய்து வருகிறது. வெளியான ஒரே வாரத்தில் சுமார் 461 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  


 




நற்செய்தி சொன்ன ஒளிப்பதிவாளர்:


லியோ படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு பூஸ்ட் அளிக்கக் கூடிய வகையில் மற்றுமொரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மீண்டும் ஒரு முறை விஜய் இணைவார் என்ற தகவலை தெரிவித்துள்ளார் லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா.  


ரசிகர்கள் ஏமாற்றம் :


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் 2022ம் ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் 'பீஸ்ட்'. நெல்சன் திலீப்குமார் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய 'டாக்டர்' திரைப்படம் ஒரு சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் படமாக அமைந்ததால் அடுத்து விஜய்யை வைத்து அவர் இயக்கும் படம் ஹிட் படமாக அமையும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் இப்படத்துக்காக கடுமையான விமர்சனங்களும் வரம்புக்கு மீறிய தாக்குதலையும் சந்தித்தார் திலீப்குமார்.


சீக்ரெட் பார்ட்டி :


பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு பின்னர் படம் சரியாக ஓடவில்லை என்றாலும் பார்ட்டி ஒன்றை பீஸ்ட் படக்குழுவினருக்காக ஏற்பாடு செய்து இருந்தார் நடிகர் விஜய். இந்த பார்ட்டி பற்றியும் சில கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அந்த பார்ட்டி நடைபெற்றதற்கான காரணம் குறித்து ஒளிப்பதிவாளர் பரமஹம்சா பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பேசியிருந்தார்.


அந்த பார்ட்டி பீஸ்ட் படத்துக்கானது அல்ல என்றும், அது நெல்சன் - விஜய் இருவரும் இணையப் போகும் அடுத்த படத்துக்கானது என்றும் உண்மையை கூறியுள்ளார். மேலும் அந்த பார்ட்டியில் தான் லியோ படத்துக்கு தான் ஒளிப்பதிவு செய்யப்போவது குறித்தும் பேசியதாக மனோஜ் பரமஹம்சா கூறியுள்ளார்.



ஒன்ஸ்மோர் கூட்டணி :


சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' படம் மாஸ் வெற்றி பெற்றதால் அந்தப் புத்துணர்ச்சியில் இருக்கும் நெல்சன் விஜய்காக ஒரு கலக்கலான படத்தை தயார் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் படத்தில் இழந்ததை எல்லாம் புதிய கூட்டணியில் வசூல் செய்து விடுவார் என கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் விஜய். மிகப்பெரிய திரை பட்டாளத்தின் கூட்டணியில் உருவாகும் இப்படம் இப்போதிலிருந்தே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.