விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தயாராகி விட்டதாக நடிகர் சூரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விடுதலை முதல் பாகம்
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநரான இயக்குநர் வெற்றிமாறன் அசுரன் படத்திற்கு பிறகு, ‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தை இயக்கினார். எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி ரிலீசானது. விடுதலை படத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்த நிலையில், வாத்தியார் எனப்படும் போராளி பெருமாள் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
மேலும் இந்த படத்தில் பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம்மேனன், ராஜீவ்மேனன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்த முதல் பாகம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஏற்கனவே படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்திருந்தது.
மேலும் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் காட்சிகள் அடுத்த பாகம் பற்றிய அறிமுகத்தில் இடம் பெற்றுள்ளதால் எப்போது விடுதலை படம் இரண்டாம் பாகம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது.
இதற்கிடையில் விடுதலை படத்தின் முதல் பாகம் ஜீ5 ஓடிடி தளத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியானது. இதில் சென்சார் போர்டால் நீக்கப்பட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.
விடுதலை 2ஆம் பாகம்
விடுதலை படத்தின் முதல் பாகத்தில் சில காட்சிகள் மட்டுமே விஜய் சேதுபதி வந்திருப்பார். இரண்டாம் பாகம் முழுக்க விஜய் சேதுபதியை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டுள்ளது. இதில் போராளியாக அவர் எப்படி உருவாகினார்?, மக்கள் பிரச்சினைக்காக போராடிய அவருக்கு நியாயம் கிடைத்ததா? என்பது கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விடுதலை படத்தில் இடம் பெற்றுள்ள அவரின் கேரக்டருக்காக சிகை அலங்காரம் செய்து, காக்கி உடையுடன் ஷூட்டிங்கிற்கு செல்வது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளது.