இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி பெரும் வரவேற்பை பெற்ற விடுதலை படத்தின் முதல் பாகம் இன்று (ஏப்ரல் 28) ஓடிடியில் வெளியாகியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த விடுதலை
எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் “விடுதலை” படத்தை எடுத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31 ஆம் தேதி வெளியானது. விடுதலை படத்தில் தையின் நாயகனாக சூரி நடித்துள்ள நிலையில், வாத்தியார் எனப்படும் போராளி பெருமாள் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
மேலும் பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம்மேனன், ராஜீவ்மேனன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். முன்னதாக விடுதலை படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியிருந்தார். ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள விடுதலை படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியிருந்தது.
பிரபலங்கள் பாராட்டு
படம் வெளியான நாளில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நாளுக்கு நாள் காட்சிகள் அதிகமான நிலையில் வசூலிலும் நல்ல சாதனையை படைத்தது. இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில், “விடுதலை... இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்.சூரியின் நடிப்பு - பிரமிப்பு. இளையராஜா இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் தமிழ் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்துக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
இதேபோல் விசிக தலைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் இமயம் பாரதிராஜா என பலரும் படத்தை பாராட்டி தள்ளினர். இதனிடையே எப்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் பாகத்தில் சில காட்சிகளில் மட்டுமே விஜய் சேதுபதி வந்திருப்பார். இதனால் இரண்டாம் பாகம் முழுக்க அவருக்கான காட்சிகள் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓடிடி ரிலீஸ்
இப்படியான நிலையில் விடுதலை படம் நாளை ஓடிடியில் வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்துள்ளது. அதன்படி ஜீ தமிழ் தளத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் சென்சார் போர்டால் நீக்கப்பட்ட காட்சிகள், நீங்கள் பார்த்திராத, நம்ப முடியாத காட்சிகள் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பெரும் எதிர்பார்ப்போடு ரசிகர்கள் நள்ளிரவு வெளியான படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.