ஜெயமோகனின் "துணைவன்" நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ள திரைப்படம் "விடுதலை". இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில் படத்தில் முதல் பாகத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. "விடுதலை" திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்.
புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதி:
ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ள "விடுதலை" திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு ஆசிரியர் கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்திலும் ஒரு போராளியாகவும் நடிகர் சூரி போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்:
சமீபத்தில் தான் கொடைக்கானலில் நடைபெற்ற படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் பாகத்தின் ரிலீஸ் தேதி குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. விடுதலை படத்தின் முதல் பாகம் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதன்முறையாக வெற்றிமாறன் - இசைஞானி கூட்டணி:
பிரகாஷ்ராஜ், பவானி ஸ்ரீ, இயக்குனர் ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா. முதன்முறையாக வெற்றிமாறன் - இசைஞானி கூட்டணி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார் வேல்ராஜ். வெற்றிமாறன் இயக்கத்தில் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து இப்படம் வெளியாவதால் வெற்றிமாறன் படத்திற்கு இருக்கும் வழக்கமான வரவேற்பை விட சற்று அதிகமாகவே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது.
விடுதலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சூரி அடுத்ததாக மதயானை படத்தை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் அடுத்து தேர்ந்தெடுக்கும் படங்களை மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் சூரி என கூறப்படுகிறது.