வெற்றிமாறன்


இந்திய சினிமாவில் கதைசொல்லும் போக்கை மாற்றி அமைத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் வெற்றிமாறன். இயக்குநர் பாலுமகேந்திராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய வெற்றிமாறன் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்தின் கமர்ஷியல் வெற்றி வெற்றிமாறனுக்கு அடுத்தடுத்த படங்களின் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.


ஆனால் வழக்கமான கமர்சியல் பாதையில் செல்லாமல் திரைப்படங்களில் கதை சொல்வதில் எதார்த்தத்தையும் ஆழமான உணர்ச்சிகளையும் முக்கியமாக கருதினார் வெற்றிமாறன் . ஆடுகளம் , விசாரணை , உள்ளிட்டப் படங்களுக்கு அடுத்தடுத்து தேசிய விருதுகளை வென்ற வெற்றிமாறன் வனிக ரீதியாகவும் வெற்றிகரமான இயக்குநராக இருந்து வருகிறார்.


அசுரன் , வடசென்னை , விடுதலை உள்ளிட்ட படங்களில் தனது அரசியலை வெளிப்படையாக பேசினார். இன்று இந்திய சினிமாவில் குறிப்பிடத் தகுந்த இயக்குநர்களில் ஒருவராக வெற்றிமாறன் கருதப்படுகிறார். சமீபத்தில் வெற்றிமாறன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் தனது படங்களைப் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். இந்த நிகழ்வில் தனது முதல் படத்தின்போது இக்கட்டான சூழ்நிலையில் தனது மனைவி ஆர்த்தி தனக்கு உதவிய தருணத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் வெற்றிமாறன்.


வெற்றிமாறனுக்கு உதவிய ஆர்த்தி 


ஆனந்த விகடனில் வெற்றிமாறன் எழுதிய மைல்ஸ் டூ கோ தொடரை படித்தவர்கள் உதவி இயக்குநராக இருந்தபோது அவரது காதலியாக இருந்த ஆர்த்தி அவருக்கு எவ்வளவு பக்கபலமாக இருந்துள்ளார் என்பது தெரிந்து வைத்திருப்பார்கள். ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஆர்த்தி மாதம் மாதம் வெற்றிமாறனுக்கு 10 ஆயிரம் ரூபாய் தவறாமல் அனுப்பி விடுவாராம். 


பொல்லாதவன் படத்திற்கு முன்பாக வெற்றிமாறன் தேசிய நெடுஞ்சாலை என்கிற படத்தை இயக்கவிருந்தார். இந்தப் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருந்தார். இந்தப் படம் ஒரு சில காரணங்களால் கைவிடப் பட்டது. இதனைத் தொடர்ந்து பொல்லாதவன் படத்தை இயக்கினார். இந்தப் படத்திற்கான ஒரு காட்சியின் போது தனது மனைவி ஆர்த்தி தனக்கு செய்த உதவியை வெற்றிமாறன் பகிர்ந்துகொண்டார்.


“ பொல்லாதவன் படத்தில் தனுஷ் ஆஃபிஸில் வேலை செய்யும் ஒரு காட்சியை எடுக்க இருந்தோம் . இதற்காக பத்து பதினைந்து கம்பியூட்டர்களைக் கொண்ட ஒரு ஆபிஸ் செட்டப் தேவைப் பட்டது. நாங்கள் பார்த்த ஒரு இடத்தில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வாடகைக் கேட்டார்கள். இதனால் வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று எல்லா முயற்சிகளையும் செய்தோம். ஆனால் எதுவும் சரி பட்டு வரவில்லை. கடைசியாக நான் எனது மனைவி ஆர்த்திக்கு ஃபோன் செய்து ஒரு நாள் படப்பிடிப்பிற்கு அனுமதி கிடைக்குமா என்று கேட்டு சொல்ல சொன்னேன். அடுத்த ஐந்து நிமிடத்தில் அலுவலகத்தில் ஓகே சொல்லிவிட்டதாக ஆர்த்தி எனக்கு ஃபோன் செய்தார். அந்த காட்சி எனக்கு இன்றுவரை நன்றாக நினைவிருக்கிறது. “ என்று வெற்றிமாறன் தெரிவித்தார்.