மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா , ஆரவ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பின் இந்த படம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து மகிழ் திருமேணி இப்படத்தை இயக்கவிருப்பதாக லைகா நிறுவனம் தகவல் வெளியிட்டது. முழுக்க முழுக்க அஜர்பைஜானில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பு தொடங்கி ஒருவருடம் ஆகியும் டைட்டிலை தவிர்த்து மற்ற அப்டேட் ஏதும் வராததால் இப்படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவின. இதனிடையில் படத்தின் கலை இயக்குநர் மிலன் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்து பின் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இப்படி படம் பற்றி தொடர்ச்சியாக நெகட்டிவிட்டு பரவி வர ஒருவழியாக படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டிரைலரை வெளியிட்டது படக்குழு. இந்த டிரைலர் ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸூக்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்து வருகிறார்கள். 

அஜித் வெறும் நடிகர் இல்லை

"அஜித் சாரிடம் நான் முதலில் பார்த்து வியந்தது  அவருடைய அர்ப்பணிப்பு தான்.  ஒரு நடிகராக, பைக், கார் ரேஸராக மட்டும்தான் அவரை  நமக்குத் தெரியும். ஆனால் அதையும் தாண்டி பல விஷயங்கள் அவருக்கு தெரிந்திருக்கின்றன.அஜித் ஒரு சிறந்த புகைப்பட கலைஞர். அவர் எடுத்த சில புகைப்படங்கள் சர்வதேச அளவில் பரிசுகளை வென்றிருக்கின்றன. கலை அருங்காட்சியில் வைக்கும் அளவிற்கு அவை சிறந்த புகைப்படங்கள். அஜித் நினைத்தால் சர்வதேச புகைப்படக்காரர் ஆகவும் முடியும்.  அதே மாதிரி துப்பாக்கி சுடுதலிலும் அஜித்  பரிசுகள் வென்றிருக்கிறார். கார் ரேஸில் மணிக்கணக்கில் பயிற்சி எடுத்தவர்கள் அஜித்துடன் போட்டியிட்டார்கள்.  ஆனால் சார் படப்பிடிப்பை முடித்துவிட்டு நேராக பந்தயத்திற்குச் சென்று பரிசை வென்றிருக்கிறார். எந்த ஒரு விஷயத்தைக் கையில் எடுத்தாலும் அதில் முழு மனசோடு இறங்குவதால்தான் அவருக்கு வெற்றி சாத்தியமாகிறது." என மகிழ் திருமேணி தெரிவித்துள்ளார்.