ஒரே நடிகரை வைத்து அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தவர் நிக்ஸ் ஆர்ட் சக்கரவர்த்தி. தயாரிப்பாளரான இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தை வைத்து அதிக படங்களை எடுத்த தயாரிப்பாளர்களுள் ஒருவர் நிக்ஸ் ஆர்ட் சக்கரவர்த்தி. ராசி, வாலி, முகவரி ,சிட்டிசன் , ரெட், வில்லன் , ஆஞ்சனேயா, ஜீ,வரலாறு என அஜித்தின் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தையும் தயாரித்த பெருமை சக்கரவர்த்தி அவர்களைத்தான் சேரும்.


இறுதியாக இவரது தயாரிப்பில் , நெல்சன் மற்றும் சிம்பு கூட்டணியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் வேட்டை மன்னன். ஆனால் அந்த படம் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. அதற்க்கான காரணம் என்ன என்பது குறித்து  நிக்ஸ் ஆர்ட் சக்கரவர்த்தி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.


 




அதில் "நானா எடுத்துக்கிட்ட  பிரேக்தான் இது.  நெல்சனின் முதல் படம் வேட்டை மன்னன் பாதியிலேயே நிக்குது. குடும்பத்தில் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருந்ததால தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தேன். வேட்டை மன்னன் திரைப்படமே மீண்டும் தொடங்க வாய்ப்பிருக்கு. வேட்டை மன்னனின் இரண்டாவது பாகம் முழுவதுமே ஜப்பானில் எடுக்க திட்டமிட்டிருந்தோம். அதுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது.  அந்த 2, 3 மாதங்களில் சிம்பு வாலு திரைப்படத்தை முடிக்க திட்டமிட்டார். வேட்டை மன்னன் திரைப்படம் கொஞ்சம் அதிகமான பட்ஜெட் , அதனால சிம்பு பட்ஜெட்க்கு உதவியாக இருக்கும்னு என்னை வாலு படத்தை தயாரிக்க சொன்னார். பண்ணோம். வாலு ரிலீஸ் தள்ளிப்போச்சு! அதுக்கு சிம்பு நிறைய உதவியாக இருந்தாரு. அந்த படத்துக்கு பிறகு எனக்கு பிரீத்திங் டைம் தேவைப்பட்டது. அதனால படத்தை எடுக்க முடியல. நெல்சன் அதுக்குள்ளால  வேற புராஜெக்ட் வருது பண்ணவானு கேட்டாரு. தாராளமா பண்ணுங்க. எப்போ தேவையோ அப்போ கூப்பிடுறேன்னு சொன்னேன்.


நெல்சன் நான் சந்தித்த இயக்குநர்களிலேயே நல்ல இயக்குநர். நான் இயக்குநராக வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஆனால் ஆக முடியலை. அதனாலதான் புதுமுகங்களை வைத்து வரிசையாக படம் எடுத்தேன். வாலி திரைப்படம் பண்ணும் பொழுது , அஜித் சாருக்கு மார்கெட் கிடையாது. ஆனால் கதையை நம்பி படம் பண்ணோம் . எல்லோருக்குமே உபயோகமாக இருந்தது. இப்போ இருக்கும் தயாரிப்பாளர்கள் யாரும் கதைக்காக படம் செய்யாமல் , காம்போவிற்காக படம் பண்ணுகிறார்கள் . அதனால்தான் அது ஃபிளாப் ஆகுது. கடந்த 3 வருடங்களாக பெரிய நடிகர்களின் படங்களைத்தான் வாங்க தயாரா இருக்குறாங்க.


சின்ன பட்ஜெட் படங்களை வாங்க யாருமே ரெடியா இல்லை. காரணம் பெரிய ஹீரோக்கள் படங்கள் 2,3 நாட்களிலேயே வசூலை கொடுத்துவிடுகிறது. படம் எப்படியாக இருந்தாலும்  லாபம் கிடைச்சுடுதுல்ல” என்றார் நிக்ஸ் ஆர்ட் சக்கரவர்த்தி.