தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள திரைப்படம் 'விடுதலை'. எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை தழுவிய இப்படத்தின் திரைக்கதை இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் அதன் டப்பிங் பணிகள் இரண்டு நாட்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கியது என்பதை படக்குழு புகைப்படங்களுடன் வெளியிட்டது.
இறுதி கட்டத்தில் விடுதலை பட பணிகள் :
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மேஸ்ட்ரோ இளையராஜா. இதுவரையில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த நடிகர் சூரி முதல் முறையாக 'விடுதலை' திரைப்படம் மூலம் ஹீரோவாக நடிக்கிறார். வாத்தியார் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் இப்படத்தில் பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படை என கூறப்படுகிறது. 1992ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது தான் விடுதலை திரைப்படம் என கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது. இந்த விடியோவும் திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
வெற்றிமாறன் கொடுத்த சர்ப்ரைஸ்:
விடுதலை படத்தின் டப்பிங் பணிகளில் விஜய் சேதுபதி இரண்டு நாட்களுக்கு முன்னர் கலந்துகொண்ட நிலையில் தற்போது நடிகர் சூரி தனது பாகங்களுக்கான டப்பிங்கை முடித்தார். அந்த சமயத்தில் படக்குழுவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் பகிரப்பட்டுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் கடைசி நிமிட டப்பிங்கின்போது உரையாடல்களை சீர் செய்து மேஜிக்கை கிரியேட் செய்வது மன்னன். விடுதலை பார்ட் 1 திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் வெளியாகும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் கூடுதல் விவரமாக வெற்றியின் #வடசென்னை வாய்ஸ் ஓவர் வசனம் கடைசி நிமிட டப்பிங்கின்போது மட்டுமே சேர்க்கப்பட்டது என்பதையும் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் திரை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.