விடுதலை படப்பிடிப்பில் உயிரிழந்த சுரேஷூக்கு இரங்கல்தெரிவித்து,படக்குழு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
இது குறித்து விடுதலை தயாரிப்பு நிறுவனமான ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களது சண்டை பயிற்சியாளர் இறந்து போனது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்திருக்கிறது. விடுதலை படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சி ஒன்று எடுத்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவர் இறந்து போனார்.
படப்பிடிப்பில் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக, ஆம்புலன்ஸ் உட்பட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. ஆனாலும் அந்த பரிசுத்தமான ஆத்மாவை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர் எங்களை விட்டு சென்றது எங்களது படக்குழுவுக்கு மிகப்பெரிய இழப்பு. இது எங்களது இதயங்களிலும் நினைவுகளிலும் மறையாத வலியாக இருக்கும். சுரேஷ் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக உள்ள வெற்றிமாறன் அசுரன் படத்திற்குப் பிறகு இயக்கி வரும் படம் ‘விடுதலை’. சூரி மற்றும் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். முதல் முறையாக வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் வேடத்தில் நடிக்க,விஜய் சேதுபதி போராளியாக நடித்து வருகிறார்.
மேலும் விடுதலையில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் இணைந்துள்ளார். அதேபோல் தனுஷூம் ஒரு பாடலை பாடியுள்ளதால் எப்போது இந்த படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய நிலையில், கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி இயக்குநர் வெற்றிமாறன் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை படம் 2 பாகங்களாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதில் முதல் பாகம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், விரைந்து படப்பிடிப்பை முடிக்க படக்குழு மும்முரமாக வேலை பார்த்து வந்தது.
இந்த நிலையில், சென்னை வண்டலூர் அருகே விடுதலை படப்பிடிப்பு நடந்தது. இதில் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வந்த போது, ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் கீழே விழுந்தார். இதனையடுத்து அவரை படக்குழுவினர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் சுரேஷ்க்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன்றி சுரேஷ் உயிரிழந்தார். இந்த நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் படக்குழு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.