விடுதலை 2
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி , சூரி நடித்துள்ள விடுதலை 2 திரைப்படம் நேற்று டிசம்பர் 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. கென் கருணாஸ் , மஞ்சு வாரியர் , கிஷோர் , கெளதம் மேனன் , ராஜீவ் மேனன் , போஸ் வெங்கட் , சேத்தன் உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆ.எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சார்பாக எல்ரெட் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.
விடுதலை 2 விமர்சனம்
விடுதலை முதல் பாகத்தில் முழுக்க முழுக்க சூரியின் குமரேசன் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியாரின் கதாபாத்திரத்திற்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கோஸ்ட் , அரசு விரோதி , புரட்சியாளன் என பல அடையாளங்களால் அறியப்படும் பெருமாள் வாத்தியார் யார். அவருடைய இந்த பயணம் எங்கு தொடங்கியது , அவரது கொள்கை என்ன என்பதை மிக விரிவாக ஆராய்கிறது விடுதலை 2. பெருமாள் வாத்தியாரின் வாழ்க்கையை தெரிந்துகொள்ளும் குமரேசன் அடையும் மனமாற்றம் என்ன என்பதே படத்தின் இறுதி காட்சி.
வெற்றிமாறனின் மற்ற படங்களைக் காட்டிலும் மிக வெளிப்படையாக அரசியல் பேசியுள்ளது விடுதலை 2. படம் நெடுகிலும் அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருப்பது பார்வையாளர்களுக்கு சோர்வை அளிப்பதாக அமைந்துள்ளது. முடிந்த அளவிற்கு திரைக்கதையில் சுவாரஸ்யம் குறையாமல் காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் வடிவமைத்திருக்கிறார் வெற்றிமாறன். இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் பக்கபலமாக அமைந்துள்ளது. விஜய் சேதுபதி , மஞ்சு வாரியர் , சூரி , சேத்தன் , கென் கருணாஸ் என அனைவரது நடிப்பும் மிக சிறப்பாக அமைந்துள்ளது
ஆன்லைனில் வெளியான விடுதலை 2
பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுவரும் விடுதலை 2 படம் வசூல் ரீதியான வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திரையரங்கில் வெளியான முதல் நாளிலேயே விடுதலை 2 படம் ஆன்லைனில் முழுப்படமும் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெலிகிராம் , தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட தளங்களில் விடுதலை படத்தின் எச் டி குவாலிட்டி படம் வெளியாகியுள்ளது.
பைரசியை தடுக்க பல்வேறு முயற்சிகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வந்தாலும் ஒவ்வொரு பெரிய படம் வெளியாகும் அடுத்த சில நாட்களிலேயே அந்த படம் ஆன்லைனில் வெளியாகும் நிகழ்வு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.