சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி. சுசீலா உடல்நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்டுள்ளார். 


பி. சுசீலாவின் உடல்நிலை எப்படி இருக்கு? தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 9 மொழிகளில் சுமார் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பி சுசீலா. பழம்பெரும் நடிகைகளான சாவித்ரி, பத்மினி, சரோஜா தேவி உள்ளிட்ட நடிகைகள் நடித்துள்ள படத்தில் அவர்களுக்காக பின்னணி பாடியுள்ளார்.


மனதை கட்டிப்போடும் குரலை கொண்டு ரசிகர்களை கட்டிப்போட்டவர் பி. சுசீலா. உயர்ந்த மனிதன் படத்தில் இடம் பெற்ற "பால் போலவே" என்ற பாடலுக்காக முதன் முறையாக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை பெற்றார்.


வயது மூப்பு காரணமாக திரைப்படங்களில் பாடுவதை தவிர்த்து வரும் பி. சுசீலா, கடந்த ஜுன் மாதம், திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் முடிகாணிக்கை செலுத்தினார்.


மெல்லிய குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட சுசீலா: சினிமாவில் பாடகியாக கொடி கட்டி பறந்தவர் பி. சுசீலா. இவரின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் படமும் பெரிய வெற்றியை பெற்றது. இதன் காரணமாக, தங்களுக்கு இவர்தான் குரல் கொடுக்க வேண்டும் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் விருப்பப்பட்டனர்.


இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பி. சுசீலா அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 


இதுதொடர்பாக மருத்துவமனை அறிக்கை வந்தால்தான், அவரின் உடல்நிலை எப்படி உள்ளது என்பது குறித்து தெரிய வரும்.