இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவல் திரைப்படமாக பிப்ரவரி 17ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சம்யுக்தா, சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், சாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார் ஜி.வி. பிரகாஷ் குமார்.


வாத்தி இயக்குனர்:


கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையை மையமாக வைத்து வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சுமார் 30 கோடி ரூபாய் பொருட்செலவில்  உருவாக்கப்பட்டு 100 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது.  


 



வாத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கி அட்லூரி அடுத்ததாக மாலிவுட் முன்னணி நடிகர் துல்கர் சல்மானுடன் கூட்டணி சேர உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவரையில் காதல் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த வெங்கி அட்லூரி இந்த படத்தில் வட இந்தியாவுடன் தொடர்புடைய ஒரு கதைக்களத்தை உருவாக்கப்போவதாக தெரிவித்துள்ளார். நெருங்கிய வட்டாரங்களின் தகவலின் படி அது ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படம் என கூறப்படுகிறது.


பான் இந்திய திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸுடன் இணைந்து சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த மாதம் அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு சோசியல் மீடியா பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக படப்பிடிப்பை மேற்கொண்டு அடுத்த ஆண்டு கோடையில் படத்தை வெளியிட  திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர் என கூறப்படுகிறது. படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கிங் ஆஃப் கோதா :


அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் தற்போது துல்கர் சல்மான் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் மாதம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.


ஷபீர் கல்லாரக்கல், கோகுல் சுரேஷ், ஐஸ்வர்யா லட்சுமி, செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் ஷம்மி திலகன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். நடிகை ரித்திகா சிங் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அப்படத்தின் பணிகள் முடிவடைந்த பிறகு வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் இணைவார் என கூறப்படுகிறது.