இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படம் பிளாக் பஸ்டர் ஹிட் படமாக 50 நாட்கள் ஓடியதை கொண்டாடும் வகையில் அப்படத்தின் போஸ்டர் ஒன்றினை வெளியிட்டு தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டுள்ளது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம்.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் பல ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குனர் கௌதம் மேனன் - நடிகர் சிம்பு கூட்டணியில் வெளியான திரைப்படம் "வெந்து தணிந்தது காடு". 2016ம் ஆண்டு வெளியான 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்திற்கு பிறகு நான்காவது முறையாக இவர்கள் கூட்டணியில் உருவான திரைப்படம் என்பதால் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.
நல்ல வரவேற்பு பெற்ற படம் :
நடிகர் சிம்பு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருந்த இப்படத்தில் ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆப்ரஹம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல்கள் எல்லாம் படம் வெளியவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றது. விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இப்படம் மூலம் மீண்டும் இணைந்தது. பிரமாண்டமான டிரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழா மற்றும் பெரும் பொருட்செலவில் பல தரப்பட்ட விளம்பரத்திற்கு பிறகு இப்படம் செப்டம்பர் 15ம் உலகளவில் உள்ள திரையரங்குகளில் மிகவும் கோலாகலமாக வெளியிடப்பட்டது. வழக்கமான கௌதம் மேனன் திரைப்படங்களை காட்டிலும் இது சற்று வித்தியாசமாக ஒரு கேங்ஸ்டார் படமாக அமைந்தது படம் குறித்த எதிர்பார்ப்பினை மேலும் அதிகரித்தது.
சிம்புவின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் :
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த 'வெந்து தணிந்தது காடு' ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூலை தாறுமாறாக குவித்தது. 'மாநாடு' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் இது என்பதால் ஏகபோக குஷியில் இருந்த சிம்புவின் ரசிகர்களுக்கு இப்பம் ஒரு திரைவிருந்தாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.
'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் 50 வது நாள் பிளாக் பஸ்டர் ஹிட் தினத்தை கொண்டாடும் வகையில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் போஸ்டர் ஒன்றினை சந்தோஷத்தில் பகிர்ந்து அதனுடன் படக்குழுவினரையும் டாக் செய்துள்ளது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம். இந்த ட்விட்டர் போஸ்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.