தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிகழ்ச்சி ஜனவரி மாதம் வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை ரசிப்பதற்கு என தனி ரசிகர்கள் கூட்டங்களும் உண்டு. அதே நேரம் இந்த நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆபாசம், வன்முறை, சண்டை என தினந்தோறும் அரங்கேறி வருகிறது. இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் இல்லையென்றால் பிக்பாஸ் அரங்கத்திற்குள் நுழைவோம் என எச்சரிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' (Bigg Boss) நிகழ்ச்சி,தமிழர் பண்பாடு, மரபு மற்றும் குடும்ப அமைப்பைச் சீரழிக்கும் ஒரு 'வணிக நஞ்சாக' மாறி உள்ளது. தமிழர் வாழ்வின் மகத்தான செல்வங்களாகிய நாணம், ஒழுக்கம், நெறி ஆகியவற்றை, இந்த நிகழ்ச்சி கேலி செய்கிறது. சண்டை, குரோதம், ஆபாசம், பொய், வன்முறை ஆகிய எதிர்மறை உணர்ச்சிகளை மட்டுமே தினசரி அத்தியாயங்கள் காட்டுகின்றன. இவை எதுவுமே தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய அடையாளங்கள் அல்ல என தெரிவித்துள்ளார்.
ஆபாசம் நிறைந்த பிக்பாஸ்
இந்த நிகழ்ச்சி இளைஞர்களைத் தவறானப் பாதைக்கு இட்டுச் செல்வதுடன், தமிழர் தொன்மைக்கும், குடும்பநல்லிணக்கத்திற்கும், சமூக ஒழுக்கத்திற்கும் கடுமையானப் பண்பாட்டு அச்சுறுத்தலாக விளங்குகிறது என விமர்சித்துள்ளார். வணிக நலனுக்காக மக்களை ஏமாற்றி, சமூக உளவியலைக் கெடுக்கும் இந்த நிகழ்ச்சியைத்தமிழக அரசு உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்றும், ஊடகங்களில் பண்பாட்டு விழுமியங்களைக் காக்க 'Cable Television Regulation Act, 1995' மற்றும் 'Program Code' விதிமுறைகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
பிக்பாஸ்க்கு எதிராக போராட்டம்
இதன் ஒரு பகுதியாக, தமிழர் பண்பாடு மற்றும் குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கும்'பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தடை செய்யக் கோரி, இன்று ஞாயிற்றுக்கிழமை (09.11.2025, ) மாலை 04.00 மணி அளவில், பிக் பாஸ் படப்பிடிப்பு தளம் எதிரில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் அணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தத் தீர்மானித்துள்ளதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிக்பாஸ் படிப்பிடிப்பு நடைபெற்று வரும் EVP படப்பிடிப்பு வளாகத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.