பெயரும்,புகழும் தந்துள்ள இந்த மக்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் என நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். 


ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான மதயானைக் கூட்டம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சேதுபதி, கொம்பன், கிடாரி, ரஜினி முருகன், அப்பா, அண்ணாத்த, எனை நோக்கி பாயும் தோட்டா என ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதேசமயம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வருகிறார். 


இப்படியான நிலையில் வேல ராமமூர்த்தி நேர்காணல் ஒன்றில் தன்னுடைய சினிமா வாழ்க்கையைப் பற்றி பேசியுள்ளார். அதாவது, “திரைப்பயணம் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. எவருக்கும் கிடைக்காத வரம் எனக்கு கிடைத்துள்ளது. எதிலும் இல்லாத பெயர், புகழ் இருக்கிறது. நடிகருக்கும் நடிகைக்கும் இந்த சமூகம் கொடுக்கும் மரியாதை என்பது உலகில் எங்கு சென்றாலும் கிடைக்கிறது. இந்த சமூகத்துக்கு எவ்வளவு நாம் கடன்பட்டுள்ளோம் என்பது தெரியுமா?. இவ்வளவு அன்பையும் மரியாதையும் வச்சிகிட்டு நம்மை கொண்டாடும் இந்த சமூகத்துக்கு, மக்களுக்கு மற்ற எல்லாரையும் விட நாம் அதிகமாக கடன்பட்டுள்ளோம். இந்த வாழ்க்கையை நான் நினைத்தே பார்க்கவில்லை. 


நான் ஆசைப்பட்ட மாதிரி ஒரு நல்ல கேரக்டர் கிடைத்து அதில் நடித்து முடித்து விட்டேன். குருவிக்காரன் என்ற படத்தில் யோகிபாபு ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் கேரக்டரில் நான் நடித்துள்ளேன். அதே கெட்டப், வேட்டி, துண்டு, கண்ணாடி, நடை என அவராகவே நடித்துள்ளேன்.


இந்தப் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, சாம்ஸ், ஆர்த்தி கணேஷ் எனப் பலரும் நடித்துள்ளனர். சிங்காநல்லூரில் தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசன் வாழ்ந்த வீட்டில் தான் ஷூட்டிங் நடைபெற்றது. அவர் உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்து நடித்த அனுபவம் எல்லாம் யாருக்கு கிடைக்கும் சொல்லுங்கள். இதெல்லாம் மறக்க முடியாதவை" என வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். 


அவர் தெரிவித்த குருவிக்காரன் படத்தை ராக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர், நடிகர் சசிகுமார் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.