ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் படம் என்னை பெரிய பொண்ணாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்துள்ளது என நடிகை பேபி யுவினா (Baby Yuvina) தெரிவித்துள்ளார். 


குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்த நடிகை ஒரு காலக்கட்டத்தில் பெரிய பையன்/ பெண்ணாக பார்க்கும்போது மிகுந்த ஆச்சரியமாக இருக்கும். அப்படித்தான் சமீபத்தில் நம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் பேபி யுவனா. 2011 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரித்த உறவுக்கு கை கொடுப்போம் சீரியல் மூலம் கலையுலகில் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தவர் பேபி யுவினா. இவர் 2014 ஆம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான வீரம் படம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். தொடர்ந்து மஞ்சப்பை, அதிதி, மேகா, கத்தி, சர்கார் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினா சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார். 


இவர் அளித்த நேர்காணல் ஒன்றில், “என்னுடைய சமீபத்திய தோற்றம் பற்றி சமூக வலைத்தளங்களில் நிறைய கமெண்டுகள் வருகிறது என கேள்விப்பட்டேன். எனக்கு 15 வயசு தான் ஆகிறது. 10 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த படத்தை பார்த்து விட்டு இப்போது என்னைப் பார்த்தால் வளர்ந்திருப்பேன் தானே?. சர்கார் படத்துக்குப் பின் சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டேன். இந்த காலக்கட்டத்தில் நிறைய கதைகளை கேட்டேன். ஆனால் நல்ல கேரக்டர் கிடைக்க வேண்டும் என தோன்றியது. அப்போது தான் சைரன் படம் வந்தது. இதில் ஜெயம் ரவிக்கு மகள் கேரக்டர் என சொன்னார்கள். நான் மார்டர் பொண்ணாக இருக்கும் என நினைத்தேன். படத்தில் கிராமத்து பொண்ணு என சொல்லி விட்டார்கள். ஆனால் காட்சியை பெரிய ஸ்க்ரீனில் பார்த்தபோது சிறப்பாக வந்ததாக தோன்றியது. 


நான் ரொம்ப குட்டி குழந்தையா இருக்கும்போது ஹீரோக்களை கலாய்க்கிற மாதிரி நடிச்சிருப்பேன். ஆனால் சைரன் படத்தில் இடம் பெற்ற அடியாத்தி, கண்ணம்மா பாடலை பார்க்கும்போது பெரிய பொண்ணாக என்னை காட்டியது.  அதனால் சைரன் படம் என்னை பெரிய பொண்ணாக மக்களிடம் அடையாளம் காட்டி விட்டது.நான் ஒன்றாம், இரண்டாம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் நிறைய நாட்கள் பள்ளிக்கு சென்றதில்லை.






பெங்களூர், பல்கேரியா என பல இடங்களில் ஷூட்டிங் சென்றிருக்கேன். அப்போது என்னுடைய அம்மா தான் சக மாணவிகளின் பெற்றோரிடம் இருந்து நோட்ஸ் வாங்கி எழுதி கொடுப்பார். ஒருவகையில் எனக்கு அம்மாவும் ஒரு ஆசிரியர் தான். வீரம் படம் ஷூட்டிங்கில் எடுத்த வீடியோவில் நான் அஜித்திடம் என்ன பேசினேன் என தெரியவில்லை. இப்போ அதே நம்பிக்கையுடன் பேச சொன்னால் பேச மாட்டேன். அப்போது  நான் என்ன பேசுவேன் என எனக்கே தெரியாது. அவர்கள் என நினைப்பார்கள் என தெரியாது இல்லையா?. அந்த படம் நடிக்கும்போது எனக்கு 5 வயசு தான் ஆச்சு. அதனால் ஜாலியா பேசிட்டு இருந்திருப்பேன். இப்ப அந்த வீடியோவை பார்க்கும்போது நமக்கு நல்லா நடிப்பு வரும்போலன்னு தான் தோணுச்சு என பேபி யுவினா (Baby Yuvina) தெரிவித்துள்ளார்.