வீர சிம்ஹா ரெட்டி படத்தின் சக்சஸ் பார்ட்டியில் கதாநாயகி ஹனி ரோஸூடன் இணைந்து பாலகிருஷ்ணா ஷாம்பெய்ன் மது அருந்திய படங்கள் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.
கோலிவுட் பொங்கல் போல் டோலிவுட்டில் சங்கராந்தி ஸ்பெஷலாக இந்த ஆண்டு வீர சிம்ஹா ரெட்டி படம் வெளியானது.
பாலகிருஷ்ணா படங்களுக்கு என்றே டோலிவுட்டில் பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. ஆனால் ட்ரெய்னை பின்னோக்கி ஓட வைப்பது, கோழிகளை வைத்து எதிராளிகளை வீழ்த்துவது, கண்டபடி பரத நாட்டியம் ஆடுவது உள்ளிட்ட அவரது படக் காட்சிகள் இன்றைய இண்டர்நெட் காலக்கட்டத்தில் பெரும் ட்ரோல் மெட்டீரியலாகி நெட்டிசன்கள் மத்தியில் கேலிக்குள்ளாக்கப்பட்டும் , விமர்சனங்களைப் பெற்றும் வருகின்றன.
ஆனால் இவை எதுவும் தெலுங்கு தேசத்தில் பாலகிருஷ்ணாவுக்கு மார்க்கெட்டை எந்தவிதத்திலும் பாதித்ததில்லை. அதன்படி, சென்ற ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட் அடித்த அகண்டா படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு சங்கராந்தி ஸ்பெஷலாக வீர சிம்ஹா ரெட்டி படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில் உலகம் முழுவதும் ரிலீசான இந்தப் படத்தை பாலகிருஷ்ணா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
தெலுங்கு தேசத்தில் திரையரங்கில் திரை தீப்பிடித்தது தொடங்கி, அமெரிக்காவின் கன்சாஸ் மாகாண தியேட்டரில் அலப்பறை செய்து படத்தை பாதியில் நிறுத்தியது வரை பாலகிருஷ்ணா ரசிகர்கள் வீர சிம்ஹா ரெட்டி படத்தை தலைப்புச் செய்திகளில் இடம்பெறச் செய்தனர்.
இதனிடையே 10 நாள்களில் வீர சிம்ஹா ரெட்டி படம் 123 கோடிக்கும் மேல் வசூலித்து ஹிட் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. இந்நிலையில் முன்னதாக நடைபெற்ற இப்படத்தின் சக்சஸ் மீட்டில் படக்குழுவினர் கலந்து கொண்டு பட வெற்றியைக் கொண்டாடினர்.
இந்நிலையில் சக்சஸ் மீட்டில் பாலகிருஷ்ணாவும் ஹீரோயின் ஹனி ரோஸும் கைகளை கோர்த்தபடி ஷாம்பெய்ன் குடித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனமீர்த்துள்ளன.
61 வயதாகும் பாலகிருஷ்ணா ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரான என்.டி.ராமராவின் மகன் ஆவார். மேலும், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகவும் ஹிந்துபூர் தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவாகவும் தற்போது உள்ளார். இந்நிலையில், மூத்த நடிகரும், எம்.எல்.ஏவுமான பாலகிருஷ்ணாவின் இத்தகைய புகைப்படங்கள் பகிரப்படுவது மற்றொரு புறம் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.