veera dheera sooran release issue: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம். விஜய், அஜித்திற்கு நிகரான ரசிகர்கள் கூட்டத்தையும், நடிப்பு அரக்கனாகவும் உலா வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் கடைசியாக தங்கலான் படம் ரிலீசானது. 

ரிலீஸ் ஆகாத வீர தீர சூரன்:

இந்த நிலையில், இவரது நடிப்பில் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வீர தீர சூரன் படம் இன்று ரிலீசாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்த படம் காலையில் ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து, காலை 11 மணிக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. 

தன்னுடைய கதாபாத்திரத்திற்காக தன்னை மிகவும் வருத்தி நடிக்கும் நடிகர் விக்ரம். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா, சித்திக் என பலரும் நடித்துள்ளனர். எச்.ஆர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் சில சிக்கல்கள் காரணமாக வெளியாகவில்லை. இன்று மாலை 5 மணிக்கு படம் ரிலீஸ் ஆகும் என்று தற்போது தகவல்கள் வெளியானாலும் அதுவும் உறுதியாக தெரியவில்லை.

கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம்:

ஏற்கனவே விக்ரமின் நடிப்பில் கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஒரு உளவாளியின் கதையாக ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ளது. ஆனால், இன்று வரை இந்த படம் வெளியாகவில்லை. 

துருவ நட்சத்திரம் படம் 2015ம் ஆண்டு விக்ரம் நடிக்க உள்ளதாக முடிவு செய்யப்பட்டு, 2017ம் ஆண்டு 7 நாடுகளில் படம்பிடிக்கப்பட்டது. இந்த படத்தில் விக்ரமுடன் ரிது வர்மா, ராதிகா, பார்த்திபன், சிம்ரன், விநாயகன் என பலரும் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

நட்சத்திர பட்டாளம்:

தயாரிப்பு நிர்வாக தரப்பில் சிக்கல், கொரோனா தொற்று என அடுத்தடுத்து இதன் ரீலீஸ் ஒத்திவைக்கப்பட்டு கொண்டே இருந்தது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள இந்த படம் கெளதம் மேனனின் வேட்டையாடு விளையாடு படத்திற்கு நிகராக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போது வரை இந்த படம் வெளியாகவில்லை. 

துருவ நட்சத்திரத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இன்றுவரை படம் ரிலீசாகாமல் விக்ரம் ரசிகர்கள் மத்தியில் ஒரு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வேதனையுடன் தற்போது வீர தீர சூரன் படமும் இணைந்து விடுமோ என்று விக்ரம் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். 

வேதனையில் வி்க்ரம் ரசிகர்கள்:

வீர தீர சூரன் படம் நேரடியாக இரண்டாம் பாகம் ரிலீசாகிறது. இந்த பாகம் ரிலீசான பிறகே முதல் பாகம் ரிலீசாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது வரை வீர தீர சூரன் ரிலீஸ் ஆகாமல் இருப்பது விக்ரம் ரசிகர்களுக்குள் வேதனையை அதிகரித்துள்ளது. 

படம் வெளியாவதற்கு இருக்கும் சிக்கல்களை துரிதமாக செயல்பட்டு படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விக்ரம் ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.