படத்தின் மூலம் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை. அது ஒரு வகையான முயற்சியின் வெளிப்பாடு தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மாமன்னன் படம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிப்பில் ‘மாமன்னன்’ படம் கடந்த ஜூன் 29 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால், சுனில் என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த மாமன்னன் படம் மேற்கு மாவட்ட அரசியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
ஓடிடியில் மாஸ் காட்டிய ரத்னவேல்
மாமன்னன் படம் ஜூலை 27 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டரில் படம் பார்க்காத பலரும் ஓடிடி தளத்தில் மாமன்னன் படம் பார்வையிட்டதால் இப்படம் சாதனைப் படைத்தது. இந்த படத்தில் ரத்னவேல் என்ற வில்லன் கேரக்டரில் ஆதிக்க சாதியை சேர்ந்தவராக நடிகர் ஃபஹத் பாசில் நடித்திருப்பார். என்ன நோக்கத்திற்காக அப்படம் எடுக்கப்பட்டதோ, அதனை சிதைக்கும் வண்ணம் வில்லன் கேரக்டரை சமூக வலைத்தளங்களில் ஆளாளாளுக்கு தங்கள் சாதியின் பெருமை பேசியதாக கொண்டாடினர். இதனால் பெரும் விவாதமே ஏற்பட்டது.
சாதி ஒழிப்பு சாத்தியமில்லை
இப்படியான நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமனிடம், “மாமன்னன் படத்தில் வில்லன் கேரக்டரான ரத்னவேல் கொண்டாடப்படுவதை வைத்து மாரி செல்வராஜ் தோற்று விட்டாரே?” என்ற கருத்து எழுந்துள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘நீங்க தயாரிப்பாளர் தரப்பில் தான் கேட்க வேண்டும். மாமன்னன் படம் கமர்ஷியல் ஹிட். உலக அரங்கில் பேசு பொருளாக மாறியுள்ளது. எல்லோரும் பேசி கொண்டாடுறாங்க. அதுதான் மாரி செல்வராஜின் வெற்றி என விக்ரமன் தெரிவித்துள்ளார்.
ஆனால், ”சாதிக்கு எதிராகவே மாரி படம் எடுத்தார். ஆனால் மாமன்னனை சாதிய ரீதியில் கொண்டாடுகிறார்கள். எந்த நோக்கத்துக்காக படம் எடுத்தாரோ, அதற்கு எதிராக அமைந்து விட்டது. இது மாரி செல்வராஜூக்கு கிடைத்த தோல்வி” என சொல்வது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு, “ஒரு சின்ன கூட்டம் வந்து ரத்னவேலை கொண்டாடுவது என்பது அவர்களின் தோல்வியாகவே நான் பார்க்கிறேன். ஒரு விஷயத்தை பேசுப்பொருளாக மாற்ற வேண்டும், விவாதத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதே தோல்வியின் அடையாளம் தான். நாம் தோற்றுவிடக்கூடாது என்ற சம்பந்தப்பட்டவர்களின் பதற்றமாகவே பார்க்கிறேன். அதேசமயம் படத்தின் மூலம் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை. அது ஒரு வகையான முயற்சியின் வெளிப்பாடு தான். நாங்கள் அரசியல் களத்தின் வாயிலாக போராட்டங்கள், பிரச்சாரங்கள், மக்கள் சந்திப்பு, அவர்களை ஒன்று திரட்டுவது மூலமாக அதை முன்னெடுப்பது போல மாரி செல்வராஜ் கலை மூலம் வெளிப்படுத்துகிறார். அது ஒரே நாளில் மாறி விடாது.
இது மாரி செல்வராஜ் உட்பட யாருடைய தோல்வியும் கிடையாது. இந்த படத்தால் சீண்டப்பட்ட சாதிய உணர்வாளர்கள் சிலர் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் ரத்னவேலுவை கொண்டாடுகிறார்கள். சமத்துவம் பேசும் மாமன்னன் படம் எப்படி மக்களின் எண்ணத்தை திசை திருப்பும் என நினைக்கிறீர்கள். ஒரு வில்லனை பலமானவராக வைத்தால் நமது கருத்து பேசப்படும். டம்மியான வில்லனை ஹீரோ அடித்தால் யார் ரசிப்பார்கள் சொல்லுங்கள்” என விக்ரமன் பதில் அளித்துள்ளார்.
மேலும் படிக்க: Jailer Opening Day Collection: 'தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா': காலியாகும் டிக்கெட்டுகள்.. கலெக்ஷனை அள்ள தயாராகும் ஜெயிலர்..!