பரிதாபங்கள் யூடியூப் சேனல் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் கோபி - சுதாகர். இவர்கள் இருவருமே சமூகத்தில் நடக்கும் அவலங்களை காமெடியாக வீடியோ மூலம் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் இவர்கள் சொசைட்டி பாவங்கள் என்ற பெயரில் கவின் ஆணவக்கொலைக்கு எதிரான வீடியோவை வெளியிட்டனர். இந்த வீடியோ பலரையும் கவர்ந்த நிலையில் பாராட்டையும் பெற்றது. எந்த சமுதாயத்தை சேர்ந்த இளைஞராக இருந்தாலும் அவர்கள் சாதி வெறியர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு கொலை செய்யும் அளவிற்கு தூண்டப்படுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டினர். 

அதில் ஒரு சமுதாயத்தை முன்னேற்றுவது கல்வி மட்டுமே இல்லையென்றால் இப்படித்தான் நாசமாக போவீர்கள் என்பதையும் அழுத்தமாக காட்சிப்படுத்தியிருந்தனர். இதற்கு சமூக ஆர்வலர்கள், ரசிகர்கள் என அனைவரும் கோபி - சுதாகர் டீமை பாராட்டி பேசியிருந்தனர். குறிப்பாக அரசியல் தலைவர்கள் செய்ய வேண்டியதை இவர்கள் செய்துள்ளனர் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். எந்த அளவிற்கு சொசைட்டி பாவங்கள் நிகழ்ச்சிக்கு வரவேற்பு கிடைத்ததோ அதே அளவிற்கு எதிர்ப்பும் இருந்தது. 

பரிதாபங்கள் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தாக்கி வீடியோ வெளியிட்டிருப்பதாக கோவையை சேர்ந்த சில வழக்கறிஞர்கள் கோபி - சுதாகர் மீது புகார் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எம்.செளத்ரி முறையற்ற வார்த்தைகளால் பேசி எதிர்ப்பு தெரிவித்தார். இது ஒரு பக்கம் இருக்க கோபி சுதாகருக்கு திராவிடர் விடுதலை கழகம் ஆதரவு கொடுத்தது. இந்நிலையில், இன்று விசிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பரிதாபங்கள் கோபி - சுதாகருக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார். 

நெல்லையில் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்டதற்கு எதிராகவும் ஆணவக்கொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய விசிக தலைவர் திருமாவளவன், இந்த தம்பிங்க கோபி - சுதாகர் மிக நேர்மையாக யாரையும் குறிப்பிட்டு சொல்லாமல் வீடியோ போட்டிருக்காங்க. இந்த பிள்ளைங்களுக்கு எந்த விருது காெடுத்தாலும் பொருந்தும். அவர்கள் யாரையும் குறிப்பிட்டு தாக்கி பேசவில்லை. இந்த சமூகத்தில் இருப்பதை அப்படியே பேசியிருக்கிறார்கள்.  

அவர்கள் சொன்னதை நான் மேடையில் பேசியிருந்தால் பெரிய பிரச்னையாக மாறியிருக்கும். அந்த பசங்களை மிரட்டி கோர்ட்டுக்கு இழுத்துட்டாங்க. நல்ல வேளை அவர்கள் தலித் அல்லாத பிள்ளைகளாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இதை கண்காணிப்பதற்கு நுண்ணறிவு தேவைப்படுகிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.