தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களை தாண்டி அப்போது ஜனரஞ்சகமான படமும் வெளியாகி ரசிகர்களை கவரும். அந்த வகையில் இயக்குனர் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 படம் வெளியாகி இன்றோடு 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 


அனைத்தும் புதுமுகங்கள் 


வசதியான இளம் வயதினரின் கவர்ச்சி காதலால் வசதியற்ற ஒரு ஜோடியின் கண்ணிய காதலுக்கு ஏற்படும் இடையூறல்கள் தான் “வழக்கு எண் 18/9” படத்தின் அடிப்படை கதையாகும். இந்த படத்தில் நடித்த ஸ்ரீ, ஊர்மிளா மகந்தா, மனிஷா யாதவ், மிதுன் முரளி, சின்னசாமி உள்ளிட்ட மெயின் கேரக்டர்கள் அனைத்தும் புதுமுகங்கள். இவர்களை வைத்து ஆகச் சிறந்த செய்நேர்த்தியுடன்  நேர்மையாக இப்படத்தை இயக்கியிருந்தார் பாலாஜி சக்திவேல்.


எளிமையான காட்சிகள் 


படமே ஒரு வழக்கில் தான் தொடங்கும். அதாவது அபார்ட்மென்டில் வீட்டு வேலை செய்யும் ஊர்மிளா முகத்தில் ஆசிட் அடிக்கப்படுகிறது. போலீஸ் விசாரணையில் அவரை ஒருதலையாக காதலிக்கும்  நடைமேடை  இட்லிக் கடை பையன் ஸ்ரீ மீது பழி சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையான குற்றவாளி அதே அபார்ட்மென்டை சேர்ந்த பணக்கார பையன் மிதுன் முரளி என இன்ஸ்பெக்டருக்கு தெரிய வருகிறது. ஆனால் பணமும் அதிகாரமும் விளையாட ஸ்ரீ குற்றவாளியாக்கப்படுகிறான். இதனை தெரிந்து கொண்ட ஊர்மிளா என்ன மாதிரியான முடிவெடுக்கிறாள் என்பதை ஷாக்கிங் கிளைமேக்ஸ் உடன் சொல்லியது 
“வழக்கு எண் 18/9”


எளிய காட்சிகளை  வலி நிறைந்த உணர்வுகள், சீரழிக்கும் அறிவியல் வளர்ச்சி, பிடிக்காத பெண்ணின் முகத்தில் ஆசிட் அடிக்கும் கலாச்சாரம், கொத்தடிமை அவலம், கந்துவட்டிக் கொடும, பணக்காரர்களின் விளையாட்டு என உண்மைக்கு நெருக்கமாக பல விஷயங்களை பேசியிருப்பார் பாலாஜி சக்திவேல். ஆனால் இந்த படத்துக்குப் பிறகு அவர் படம் இயக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்..!


ரசிகர்களை கவர்ந்த கேரக்டர்கள்


இட்லிக் கடையில் அப்பாவி பையனாக வரும் ஸ்ரீ, முழுதாக இரண்டு வரி வசனம்கூட இல்லாமல் கண்களால் பேசும் ஊர்மிளா, “யோவ்... யோவ்” என வரும் இட்லிக்கடை பையன் சின்னசாமி, காதல் என்ற பெயரில் தன்னை ஆபாச வீடியோ எடுத்தது தெரிந்ததும் அதனை துணிச்சலாக எதிர்கொள்ளும் மனிஷா, வக்கிரமான பணக்கார பையனாக மிதுன் முரளி, ரோஸி அக்கா, இன்ஸ்பெக்டர் முத்துராமன் உள்ளிட்ட என அத்தனை பேரும் அழகாக நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர்ந்தார்கள். 


ஃபோட்டோ எடுக்கும் கேனான் 5டி டிஜிட்டல் கேமராவை கொண்டு இப்படத்தின் ஒளிப்பதிவை விஜய் மில்டன் மேற்கொண்டிருப்பார். இதனால் காட்சிகள் நம்மைச் சுற்றி நடப்பதை வேடிக்கை பார்ப்பதைப் போல காட்சிகளை நமக்கு கொடுத்திருந்தார். இசையே இல்லாமல் ஒலிக்கும் பாடல்கள், கிளைமேக்ஸ் காட்சியில் கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் மீது ஆசிட் வீசிய ஹீரோயினை போலீசார் அடிக்க முயல, அவரை பெண் வக்கீல்கள் காப்பாற்ற முயல்வது பல நுணுக்கமான காட்சிகள் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. 


நிச்சயமாக  இந்த படம் ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகர்களும் பெருமைக் கொள்ள வேண்டிய படம் தான்..!