பாடகியும் இசையமைப்பாளருமான பவதாரிணியின் (Bhavatharini) திடீர் மறைவு திரையுலகத்தினரையும், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது இளமை மற்றும் மெல்லிய குரலால் கேட்போரின் மனதை லேசாக்கி மாயாஜாலம் செய்யக்கூடியவர். 47 வயதேயான இந்த இசை வாணிக்கு இவ்வளவு சீக்கிரம் விடை பெற்றுச் சென்றது அனைவரையும் பெரும் துக்கத்தில் மூழ்கடித்துள்ளது. 


ஒட்டுமொத்த குடும்பமே அவர்களின் இசையால் மக்களை சந்தோஷப்படுத்தியவர்களாக இருக்கும் நிலையில், எப்படி ஆறுதல் சொல்வது என்பது மிக பெரிய வேதனை. இசைமைப்பாளர்கள், இயக்குநர்கள் என குடும்பமே வித்வான்களாக கலைத் துறையில் சாதனைகளை செய்து வர, அதில் போட்டியின்றி மிகவும் சாந்தமான ஒரு அமைதிப் புறாவாக இருந்த பவதாரிணியின் இழப்பு அந்தக் குடும்பத்திற்கே ஒரு பேரிழப்பு. குறைவான பாடல்கள் மட்டுமே பாடி இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் தனித்துவம் மிக்கது என்பது மறுக்க முடியாத ஒன்று. 


 



வாசுகி பாஸ்கர் பதிவு:


இந்நிலையில், இளையராஜாவின் மற்றுமொரு சகோதரர் ஆர்.டி. பாஸ்கரின் மகளும் திரையுலகின் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரான வாசுகி பாஸ்கர் தன்னுடைய அன்பான சகோதரி பவதாரிணியின் மறைவுக்கு தன்னுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கம் மூலம் மிகுந்த மனவேதனையுடன் ட்வீட் ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். 


"என்னுடைய மறுபாதி நீ... இப்போது அதை என்னிடம் இருந்து எடுத்து சென்றுவிட்டாய். மறுபக்கம் உன்னை பார்க்கிறேன். என்னுடைய ஒரே சகோதரி. உன்னை நாங்கள் அனைவரும் பயங்கரமாக மிஸ் செய்வோம். லவ் யூ பவதா" என உருக்கமாக பதிவிட்டுள்ளார் வாசுகி பாஸ்கர். 


பவதாரிணியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட வாசுகி பாஸ்கர், சகோதரியின் உடலை பார்த்து உடைந்து அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அந்தக் குடும்பத்தின் இரு பெண் தேவதைகள் இவர்கள் இருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 


 



ஹாசினியின் வீடியோ :


அதே போல இளையராஜா மனைவி ஜீவாவின் உறவினரான சின்னத்திரை நடிகை ஹாசினி தற்போது அமெரிக்காவில் இருப்பதால், தன்னால் இந்த இறுதி சடங்கில் கலந்து கொண்டு பவதாரிணியின் முகத்தை கூட பார்க்க முடியாமல் போய்விட்டது என தனது வருத்தத்தை வீடியோ மூலம் பகிர்ந்து இருந்தார்.


அதில் ஒரு மாதத்திற்கு முன்னர் தான் பவதாரிணிக்கு புற்றுநோய் நான்காவது ஸ்டேஜில் இருப்பது கண்டறியப்பட்டது என்றும் அதற்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக தான் இலங்கை சென்றார்கள் ஆனால் சிகிச்சை ஆரம்பிக்கும் முன்னரே அவர் இறந்துவிட்டார் எனவும் கூறி கண்ணீர் மல்க அந்த வீடியோவில் பேசி இருந்தார் நடிகை ஹாசினி. 


சகோதரியின் மறைவால் யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி என அனைவரும் மிகுந்த மனவேதனையில் தவித்து வர, மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் இறுகிய மனதுடன் தவித்து வருகிறார் இசைஞானி இளையராஜா.