நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ரிலீஸ் குறித்து மிக முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


வாரிசு:


இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும்  வாரிசு படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ள பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். சமீபத்தில் வாரிசு படத்தில் ரஞ்சிதமே பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.  


தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாரிசு படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சில தினங்களுக்கு முன் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.





 அதில் பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கூறப்பட்டது. இதனால் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகும் வாரிசு படத்துக்கு சிக்கல் எழுந்தது. 


தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு தமிழ் திரையுலக பிரபலங்களும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். ஆனாலும் விஜய் ரசிகர்கள் வாரிசு படத்தையும், அதன் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியையும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். 


திரையரங்க வெளியீட்டு உரிமை:


இந்நிலையில் வாரிசு படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை லலித் குமாரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதே செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தான் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை தயாரித்திருந்தது. அதேசமயம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள துணிவு படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.