வாரிசு படம் பொங்கல் விருந்தாக உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அதாவது தைப்பொங்கலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக படம் வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


 






முன்னதாக வரும் டிசம்பர் 4ஆம் தேதி,விஜய்க்காக சிம்பு பாடியுள்ள இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் எனவும் அதற்கான புரோமோ வீடியோ வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இப்பாடலில் நடிகர் சிம்பு - தமன், பாடி இசையமைக்கும் காட்சிகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே இப்படத்தின் முதல் சிங்கிளாக ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே...’ பாடல் ஏற்கெனவே வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்துள்ளது.


ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாக தயாராக உள்ளது. முன்னதாக படம் வெளியாவதில் ஏற்பட்ட சில சர்ச்சைகள் முடிவுக்கு வந்தது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனைத் தொடந்து வாரிசு திரைப்படம் குறித்த மேலும் ஒரு புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.


வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.  இப்படம் பொங்கலுக்கு தெலுங்கில் வெளியாவதில் பல சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், தற்போது அனைத்தும் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது.


ஏற்கெனவே அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,  இந்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு மோத உள்ளதை எதிர்பார்த்து கோலிவுட் ரசிகர்கள் உற்சாகத்தில் காத்துள்ளனர்.