பிக்பாஸ் மூலம் பிரபலமான சம்யுக்தா ஷண்முகநாதன் ‘வாரிசு’ படத்தில் விஜயுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய சம்யுக்தா சண்முகநாதன், “ விஜய் சார் என்னைப்பார்த்த உடனே அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னார். உண்மையில் 'வாரிசு' படத்தில் வேலை பார்த்தது ஒரு அற்புதமான அனுபவம். படம் பிரமாண்டமாகவும், அற்புதமாகவும் வந்திருக்கிறது. விஜய் சார் தொழிலுக்கு மிகவும் நேர்மையாக இருக்கிறார். சரியாக காலை 7 மணிக்கெல்லாம் செட்டிற்கு வந்து விடுவார். அவர் நடனம் ஆடுவதை முதன்முறையாக நேரில் பார்த்தேன். அது என்னை ஆர்ப்பரிக்க வைத்தது. அவர் ஆடி முடித்ததும் மொத்த செட்டே கைத்தட்டி ஆரவாரம் செய்தது. அவரிடம் ஒப்பிட முடியாத அளவிற்கு எனர்ஜி இருக்கிறது. அவர் அந்த முழு எனர்ஜியோடு ஆடுவதை பார்க்கும் போது அழகாக இருந்தது."என்று பேசியிருக்கிறார்.
விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழில் 'வாரிசு' என்ற பெயரிலும் தெலுங்கில் 'வாரசுடு' என்ற பெயரிலும் இந்தத்திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளும் வெளிவர இருக்கும் இந்த திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டு, பின்னர் படப்பிடிப்பு முடியாத காரணத்தால் பொங்கல் ரிலீஸ் என தள்ளி வைக்கப்பட்டது. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முன்னதாக ‘வாரிசு’ படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி, மக்களின் வரவேற்பை பெற்றது. விஜய் ரசிகர்களின் மனதில் ஒருபக்கம் எதிர்ப்பார்ப்பு இருக்க மறுபக்கம், படம் சுமாராக இருக்குமோ என்ற பயமும் இருந்து வருகிறது. கடந்த முறை பீஸ்ட் படத்திற்கு பில்-அப் கொடுத்து காரியத்தை கெடுத்த படக்குழுவினரை, விஜய் ரசிகர்கள் பாரபட்சம் பார்க்காமல், திட்டி தீர்த்தனர். தமிழ் புத்தாண்டுக்கு கடுப்பான விஜய் ரசிகர்கள், “ தளபதி இல்லாத தீபாவளியே இல்லை. சன் டி.வியில் தீபாவளிக்கு பீஸ்ட் படம் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது” என ட்வீட் செய்து அவர்களின் பொங்கி வரும் உணர்வுகளை ஷேர் செய்து வருகின்றனர்.
அதே போல, படம் பொங்கலுக்கு வெளியானாலும், படத்தின் முதல் பாடல் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளது என இசையமைப்பாளர் தமன் பேசியிருக்கிறார். இதைப்பற்றிய அதிகாரபூர்வ தகவல், அக்டோபர் 20 அல்லது 21 ஆம் தேதி வெளியாகும் எனவும் பேசப்படுகிறது.