வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த நிலையில், வாரிசு படத்தின் பாடல்களும், நடிகர் விஜய்யும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளனர்.


நடன இயக்குநர்கள் ஜானி, ஷோபி, பாடலாசிரியர் விவேக், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத் குமார், ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர், இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ உள்ளிட்ட பலரும் விழா மேடையில் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.


விஜய்தான் சூப்பர் ஸ்டார்


இந்நிலையில், ’நம்பர் 1’ சர்ச்சை குறித்து ஆடியோ விழாவில் தில் ராஜூ மீண்டும் பேசியுள்ளது கவனமீர்த்துள்ளது.


”நம்பர் 1.... நம்பர் 1.... விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அவர் சினிமாவில் மட்டுமல்ல; நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான்.


ஒரு காலத்தில் தமிழ் தயாரிப்பாளர்கள் தெலுங்குல படம் பண்ணுவாங்க. தெலுங்கு தயாரிப்பாளர்கள் தமிழ் ல படம் பண்ணுவாங்க. விஜய் சார் எனக்கு படம் கொடுத்து அந்த பொற்காலத்த மீட்டுருவாக்கம் செஞ்சிருக்காரு.


வம்சி 30 நிமிடங்கள் தான் கதை சொன்னாரு. அப்பவே விஜய் சார் இந்தப் படம் பண்றோம்னு சொல்லிட்டாரு. விஜய் தயாரிப்பாளர்களின் ஹீரோ!


நான் முதல்முறை அவரை பார்க்கும் போது எனக்கு காபி போட்டு கொடுத்தார். தொடர்ந்து படம் செய்வது பற்றி பேசும் போது அவர் நான் உங்களை பற்றியும், நாங்கள் செய்த படங்கள் பற்றியும் தெரியும். அதனால் நாம் படம் செய்யலாம் என்று சொன்னார்.


பொங்கல் எங்களுடையது


நமது அப்பா அம்மாவிற்கு வாரிசு படம் டெடிகேஷனாக இருக்கும். வாரிசு படம் குடும்பப் படமாக இருந்தாலும், ரசிகர்களுக்கு தேவையான அனைத்தும் இதில் இருக்கிறது. 


வாரிசு படம் தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு,  வட மாநிலங்களிலும் பெரிய வெற்றி பெறும்! பொங்கல் எங்களுடையது!  ஏதாவது தப்பா பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள்” எனப் பேசியுள்ளார்.


தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் தான் நம்பர் ஒன் ஸ்டார். ஆனால் அவரது வாரிசு படத்திற்கு தமிழ்நாட்டில் போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று தயாரிப்பாளர் தில் ராஜு கடந்த வாரம் பேசியது பெரும் சர்ச்சையானது.


‘நம்பர் 1’ சர்ச்சை


”துணிவு படத்துக்கு நிகரான தியேட்டர்கள் தமிழ்நாட்டில் வாரிசு படத்திற்கு கிடைக்கவில்லை. தியேட்டர்களை சம அளவில் பிரித்து தருவதாக  கூறுகிறார்கள். ஆனால், பல்வேறு தகவல்களின்படி விஜய் தான் தமிழ்நாட்டின் நம்பர் 1 ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார். அதனால் வாரிசு படத்திற்கு அதிக தியேட்டர்கள் வேண்டும் என்று உதயநிதியிடம் கேட்கப்போகிறேன்.  


அஜித்தின் துணிவு படத்தை ரிலீஸ் செய்யும் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், துணிவு படத்திற்கு அதிக தியேட்டர்களை லாக் செய்துவிட்டு, வாரிசுக்கு போதுமான தியேட்டர்களை கொடுக்க மறுக்கின்றது. துணிவுக்கு நிகராக வாரிசை ரிலீஸ் செய்ய போதுமான தியேட்டர்களை ஒதுக்கினாலே போதும். ஏனெனில் இது பிசினஸ்" என்று கூறியிருக்கிறார்.


விஜய் - அஜித் ரசிகர்களுக்கிடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், தில் ராஜூவின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.


விஜய்யை வைத்து படம் எடுத்துவிட்டார் என்பதற்காக தில் ராஜூ தேவையில்லாமல் பேசி வம்பிழுப்பதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் தில் ராஜூவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.