என்னை ஜெயிக்க வேண்டும் என்று தான் ஓடினேன்... உங்களுக்கு போட்டி வேறு யாருமில்லை... நீங்கள் மட்டும் தான் என நடிகர் விஜய் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.


வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று (டிச.24) மாலை தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்றது.


என் நெஞ்சில் குடியிருக்கும்...


இந்நிலையில் விழாவுக்கு கிரே நிற சட்டை, வெள்ளை பேண்ட் சகிதம் அரங்கம் அதிர விஜய் மாஸ் எண்ட்ரி கொடுத்தார்.  ரசிகர்கள் அருகிலேயே விஜய்யை பார்க்கும் வகையில் தனி பாதை அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் நடந்து சென்று விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.


தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவில், நடன இயக்குநர்கள் ஜானி, ஷோபி, பாடலாசிரியர் விவேக், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத் குமார், ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர், இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ உள்ளிட்ட பலரும் விழா மேடையில் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மறுபுறம் விஜய்யின் இண்ட்ரோ பாடலான வா தலைவா தொடங்கி பாடகர்கள் வரிசையாக பாடல்களை பெர்ஃபார்ம் செய்தனர்.


விழாவின் இறுதிக்கட்டமாக நடிகர் விஜய் அரங்கம் ஆர்ப்பரிக்க பேசத் தொடங்கினார்.


“என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு வணக்கம். பயணம் நிறைவாக இருக்க வேண்டும் என்றால் போகிற பாதை தெளிவாக இருக்க வேண்டும். என்னை உருவாக்கிய உங்களுக்கு  நன்றி. தில் ராஜு, வாரிசுக்கு வாழ்த்துக்கள் சார். நான் உங்களுக்கு பிறந்த வாரிசை சொன்னேன்!


எனக்கு போட்டியாக வந்த நடிகர்...


தமன் புல்லாங்குழலை வைத்து கூட, பீட் போலதான் வாசிப்பார். பாட்ட போட சொன்னா பீட்டா போட்டு வைச்சி இருக்காரு! குஷ்பூ படமான சின்ன தம்பி படத்தை கமலா திரையரங்கில் எனது கேர்ள் பிரண்டை அழைத்து சென்றேன்; அவரை பார்த்த உடன் எனக்கு அதுதான் நியாபகம் வந்தது.


எனக்கு போட்டியாக 1992இல் ஒரு நடிகர் வந்தார்; அவரை ஜெயிக்க வேண்டும் என்று நான் ஓடினேன். ஆனால் அவர் எங்கு சென்றாலும் வந்தார். அவரை ஜெயிக்க வேண்டும் என்று முயற்சித்து முயற்சித்து இந்த இடத்தில் இருக்கிறேன். அந்த நடிகர் பேர் ஜோசப் விஜய்.. ஆம் அது நான்தான்” எனப் பேசினார்.


மேலும் வேறு யாரையும் நீங்கள் போட்டி யாளராக பார்க்க வேண்டாம், உங்களுக்கு நீங்களே போட்டியாளர் எனவும் விஜய் அழுத்தமாகத் தெரிவித்தார்.


ரஞ்சிதமே ஸ்டைல் முத்தம்!


 






தொடர்ந்து பேசிய விஜய், “இந்த படத்தில் எனக்கு சூப்பராக ஒன்று சிக்கியது. இனி உங்களுக்கு முத்தம் கொடுக்க ரஞ்சிதம் ஸ்டைலை தான் பயன்படுத்த போகிறேன். இனி இதுதான்” எனக்கூறி தன் ரசிகர்களுக்கு முத்தங்களை பறக்க விட்டார்.


மேலும்,  விழா மேடையில் நின்றபடி அரங்கம் நிறைய குவிந்திருந்த ரசிகர்களுடன் செல்ஃபி வீடியோ எடுத்த விஜய், “எனக்கு ட்வீட் போட தெரியாது.. என்னோட அட்மின கூப்பிடுறேன்..” எனக் கூறி தன் மேலாளரின் பக்கத்தின் மூலம் வீடியோ ஒன்றையும் பகிர வைத்தார்.