உலகெங்கிலும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியானது விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள். ரசிகர்கள் மத்தியில் இரண்டு திரைப்படங்களுக்கும் அமோகமான வரவேற்பு ஒரு பக்கம் கிடைத்தாலும் மறுபக்கம் படம் வெளியாகி இன்னும் 12 மணிநேரம் கூட முழுமையாக முடிவடையாத சூழலில் அதற்குள் இணையத்தில் லீக்கானது.
திரைப்படங்கள் ரிலீஸாவதும் அவை இணையத்தில் லீக்காவதும் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் முன்னணி நடிகர்களின் படங்களாக இருந்தால் சொல்லவே தேவையில்லை. திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே சில சமயங்களில் இணையத்தில் லீக்காவது வழக்கமாகிவிட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு பதிவு :
சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய் நடித்துள்ள இந்த பொங்கல் ரிலீஸ் திரைப்படங்கள் இணையத்தில் வெளியாக கூடாது என ஏற்கனவே படக்குழுவினர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதை மீறியும் தற்போது லீக்கானது நடைபெற்றுள்ளது இரு தரப்பு படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்பெல்லாம் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள் ரிலீஸாகும் புதிய படங்களை லீக் செய்யும் ஆனால் தற்போது அதை டெலிகிராம் போன்ற வலைத்தளங்களே செய்ய தொடங்கிவிட்டன. இது போன்ற அத்துமீறல்களை தடுக்க அரசு பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுத்தாலும் அவற்றை எல்லாம் மீறி இது போன்ற சட்ட விரோதமான செயல்களை சிலர் செய்து தான் வருகிறார்கள்.
பிரீமியர் காட்சி :
நேற்று வாரிசு படத்தின் பிரீமியர் காட்சி சத்யம் சினிமாஸில் பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்களுக்காகவும் வெளியிடப்பட்டது. அந்த பிரீமியர் காட்சி முடிந்ததுமே சோசியல் மீடியாவில் பல்வேறு ஹேஷ்டக்குகளுடன் படத்தின் காட்சிகள் வட்டமிட துவங்கிவிட்டன. அது மட்டுமின்றி நள்ளிரவு 1 மணிக்கு வெளியான வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் அடுத்த 5 மணி நேரத்தில் டெலிகிராமில் வெளியானதால் படத்தின் வசூல் பாதிக்கப்படுமா என்ற அச்சத்தில் இருக்கின்றனர் படக்குழுவினர். இது குறித்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் ரசிகர்கள்.
மேலும் ரசிகர்கள் இணையத்தில் லீக்கான படங்களை பார்க்காமல், படங்களை தியேட்டருக்கு சென்று படத்தை பார்க்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர் படக்குழுவினர்.