சூர்யா நடிப்பில் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு,  வெளிவந்திருந்த " ஜெய் பீம் "  திரைப்படத்தை  இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பல்வேறு வகைகளில்,  பலதரப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றிருந்தது. அரசியல் வட்டாரத்திலும் இத்திரைப்படம் பேசப்பட்டது. அதே போன்று இத்திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியது. இந்தநிலையில் இத்திரைப்படத்தில் ,   திட்டமிட்டு , வன்னியர் சமுதாயத்தை இழிவு படுத்தியதாக,  பல்வேறு வன்னியர் சங்கங்களும், பாமகவும் போர்க்கொடி தூக்கியது.  படத்தில்  நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்த போலீஸ், ஒருவர் வீட்டில் வன்னியர் சங்க கலசம் காலண்டர் புகைப்படம் இருப்பது போல்  திரையில் காட்டப்பட்டிருந்தது.  




நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் தொடர் எதிர்ப்பை தொடர்ந்து, அந்த காட்சிகள் வந்த காலண்டர் புகைப்படம் மாற்றப்பட்டது. ஆனாலும் இயக்குனர் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர்  மன்னிப்பு கேட்க வேண்டும் என தொடர்ந்து வன்னியர் சங்கத்தினர் தெரிவித்து வந்தனர்.


இந்தநிலையில் ஜெயிலர் படம் கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து,  நடிகர்   ரஜினிகாந்தின்  170-ஆவது திரைப்படத்தை  ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளார். கடந்த சில நாட்களாக இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் பெயர்கள் அறிவித்து வந்தநிலையில்,  இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த திரைப்படத்திற்கான பூஜைகள் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படத்தை  லைக்கா தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.  இதில் ரஜினி, மஞ்சு வாரியர், ஞானவேல் , நடிகர் ரக்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்  தற்பொழுது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில்,   இத்திரைப்பட்டத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் தொடங்கியுள்ளது. இதற்காக நேற்று முன்தினம் திருவந்தபுரம் புறப்பட்ட சென்ற ரஜினி, இந்த படம் நல்ல கருத்துள்ள , கமர்சியல் படமாக பிரம்மாண்டமாய் உருவாகுவதாக அவர் தெரிவித்து இருந்தார். .




இந்த நிலையில், இப்படத்தை புறக்கணித்து நாம் எதிர்ப்பை காட்டுவோம் என  வன்னியர் சங்க மாநில செயலாளர் க. வைத்தி  முகநூலில் பதிவு செய்திருப்பது ,  சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.  அந்த பதிவில் " திரைப்பட இயக்குநர் த.செ.ஞானவேல், வன்னியர் சமூகத்தை சிறுமைப்படுத்தும் விதமாகவும், இழிவாகவும் காட்டியதுடன், நமது மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் அவர்களையும் எதிர்மறையான கதாபாத்திரமாக வடிவமைத்ததை கண்டித்து, நாம் அனைவரும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தோம்.  ஒட்டுமொத்த வன்னியர் சமூகமும், இதர சகோதர சமுதாயங்களும் எதிர்ப்பு தெரிவித்தும், இதுவரை தான் செய்தது தவறு என நேரடியாக மன்னிப்பு கூட கேட்காதவர் த.செ.ஞானவேல்.




இத்தகைய போக்கை கொண்டிருக்கும், ஞானவேல் பங்களிப்பில் உருவாகும் எந்த திரைப்படத்தையும் வன்னியர் சமூக மக்கள் ஆதரிக்காமல், ஒற்றுமையாக புறக்கணிக்க வேண்டும். அதன்மூலம் நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் " என அப்பதிவில் கூறப்பட்டுள்ளது


ஏற்கனவே பாபா  வெளியீட்டும்போது ரஜினிக்கும் பாமகவினருக்கும்,  நேரடி மோதல் ஏற்பட்டது.  புகை பிடிக்கும் காட்சிகளின் நடிக்க மாட்டேன் என ரஜினி அறிவித்தது தொடர்ந்து, இது தரப்பும் சமாதானமானது. இந்தநிலையில் இயக்குனர்  ஞானவேலை எதிர்ப்பது மூலம்,  ரஜினி திரைப்படத்திற்கு மறைமுக எதிர்ப்பை வன்னியர் சங்கம்   பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது