நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பொதுமக்கள், பிரபலங்கள், அரசு அதிகாரிகள் என பல தரப்பினர்களும் சர்ச்சைக்குரிய விவாதங்களைத் தொடர்ந்து வந்தனர்.




நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் நாள் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. திருமணமாகி நான்கு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாங்கள் இருவரும் அம்மா அப்பா ஆகியுள்ளதாக விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்த செய்தி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. எனவே இது வாடகைத் தாய்முறையாகத் தான் இருக்க முடியும் எனவும் பல தரப்பினரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். நடிகை வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பெற்றோர்களான நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினரை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார். 






 அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் பெற்றோர்களாக ஓர் அழகான பயணத்தை தொடங்க வாழ்த்துகிறேன்!  நீங்கள் இருவரும் மற்றவர்கள் கூறுவதை காதில் வாங்காதீர்கள். குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உங்களது முடிவு மிகவும் சிறந்தது. உங்கள் குழந்தைகள் உடடான ஒவ்வொரு தருணத்தையும் அன்புடன் கொண்டாடுங்கள். கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொள்வார்" என்று பதிவிட்டுள்ளார்.






மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவனை சமூக வலைதளங்களில் அவதூறாக பேசும் அனைவரையும் திட்டி வனிதா விஜயகுமார் ட்வீட் செய்துள்ளார். அதில் முதலில், ''ஒருவரது வாழ்வின் சந்தோஷமான தருணங்களை சீரழிப்பது என்பது சட்டப்படி தண்டிக்கக்கூடிய குற்றம் ஆகும். சட்டம் தெரியும் மருத்துவம் தெரியும் என சில கோமாளிகள் நேர்காணல் கொடுப்பதும் ட்வீட் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் திருந்தவே மாட்டார்கள். கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்குத் தெரியும் யாருக்கு என்ன கொடுக்க வேண்டும்'' என்று காரசாரமாக பதிவிட்டுள்ளார்.






மேலும் இது குறித்து பதிவிட்ட வனிதா விஜயகுமார், ''ஒன்றும் தெரியாத இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு  அவர்களுக்கு தேவையான அனைத்தையும் அளிக்கக்கூடிய ஓர் அன்பான பெற்றோர் கிடைத்து இருப்பதை தவிர வேறு என்ன அழகான விஷயம் இருக்க முடியும்'' என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 


நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியின் குழந்தைகள் குறித்து ஒருபுறம் காரசாரமான விவாதங்களும் எதிர்ப்புகளும் எழுந்து வந்தாலும்; மறுபுறம் மனிதநேயமிக்க மனிதர்கள் குழந்தை பெற்றெடுப்பது என்பது அந்த தம்பதியினரின் முடிவு என்று ஆரோக்கியமான முறையில் விமர்சனங்களை கண்டித்தும் வருகின்றனர். உண்மையில் அவர்கள் வாடகைத் தாய் முறை மூலம்தான் குழந்தைகள் பெற்றெடுத்தார்களா அல்லது தத்தெடுத்தார்களா என்பது குறித்த விளக்கம் அவர்களே முன்வந்து அறிவிக்கும்போது தான் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.