நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் திரைப்படம் குறித்து ஒரு பேட்டியில் நடிகை வனிதா விஜயகுமார் தனது தனிப்பட்ட பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு தனியிடம் கொண்ட கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் பிரஷாந்த். இவர் கடைசியாக தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடித்த வினய விதேய ராமா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வைகாசி பொறந்தாச்சு தொடங்கி, ஆணழகன், வண்ணவண்ண பூக்கள், ஜீன்ஸ் என தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெறத் தவறின.
இதனையடுத்து மீண்டும் தமிழ் திரை உலகில் தனது அடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் வகையில் பிரஷாந்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் அந்தகன். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகி வருகிறது அந்தகன் திரைப்படம். இப்படம் தெலுங்கு, மலையாளத்திலும் ஹிட் அடித்தது. அந்தகன் திரைப்படத்தை இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட தியாகராஜன் தயாரித்து இயக்கியுள்ளார். பிரசாந்த் உடன் சிம்ரன், சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், நவரச நாயகன் கார்த்திக், ஊர்வசி, ப்ரியாஆனந்த், யோகி பாபு, மனோபாலா, மற்றும் வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள அந்தகன் படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் வனிதா விஜயகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது குறித்து தியாகராஜன் “நான் இந்தக் கதாபாத்திரத்திற்கு வனிதாவை தவிர வேறு யாரையுமே யோசிக்கவில்லை. அவர் அவ்வளவு பெர்ஃபெக்டாக நடித்துள்ளார். எல்லா ஷாட்டுமே ஒரே டேக் தான். எனக்கு முக்கியமாக ஒரு கடமை இருக்கிறது. பிரசாந்துக்கு மணமுடித்து வைக்க வேண்டும்” என்றார்.
பின்னர் வனிதாவை நோக்கி அவர் ஏன் தந்தையுடன் சேர முயற்சிக்கவில்லை என்று கேட்க அதற்கு வனிதா “இல்லை நான் தனியாகவே முயற்சி செய்தேன். கபாலி பட ஷூட்டிங்கின் போது ரஜினி சாரையும் பார்த்து ஹெல்ப் கேட்டேன். அவர் அப்பாகிட்ட பேசியிருப்பாரோ என்னவோ அதற்குப்பின்னர் அப்பா, ரஜினி அங்கிள் ரிலேஷன்ஷிப்பே கூட முடிஞ்சுபோன மாதிரி ஆயிடுச்சு. நான் எல்லாத்தையும் வெளிப்படையாக பேசிவிடுகிறேன். அது சிலருக்கு பயமா இருக்கிறது போல். என்னைப் பார்த்து எல்லோரும் ஏன் பயப்படுகிறார்கள் என்றுகூட எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையும் இல்லை. இந்தப் படத்தில் நடித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தியாகராஜன் அங்கிள் எனக்கு ஒரு காட் ஃபாதர் மாதிரி” என்றார்.