பிக்பாஸ் நிகழ்சியின் மூலம் பிரபலமான வனிதா விஜயகுமார், தற்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது , யூடியூப் சேனலில் ஆக்டிவாக வீடியோ போடுவது போன்றவற்றை செய்து வருகிறார். இந்நிலையில், திருமண கோலத்தில் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் திருமணம் செய்து கொண்டது போல அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இப்போது வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆனதோடு வாழ்த்துகளையும் பதிவு செய்தனர்.
இது ரியல் படமா ரீல் படமா என்பது வனிதா தரப்பில் இருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்ட பின்னரே உறுதியாக சொல்ல முடியும் என்பதால், நெட்டிசன்கள் குழப்பதில் உள்ளனர். அதே நேரத்தில் அவர் பவர் ஸ்டாரை மணந்திருக்கலாம் என்று அவரது பதிவிலேயே ரசிகர்கள் பலர் வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.
அதன்படி, இன்று, செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் என்ன விளக்கம் தரப்போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அது பிக்கப் டிராப் என்ற படத்தின் அறிமுக விழா என்பது தெரியவந்தது. பிறகு செய்தியாளர்களை சந்தித்த வனிதா, “ஆண்கள் எத்தனை திருமணம் செய்தாலும் யாரும் தவறாக பேசுவதில்லை.. ஆனால் நான் வெளிப்படையாகதான் செய்கிறேன். ஆனால் தவறாக எழுதுகிறார்கள். நான் 40 திருமணம் கூட செய்வேன். எனக்கு அச்சம் இல்லை. ஆனால் இதுபோல தவறாக பேசுவதால்தான் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.” என தெரிவித்துள்ளார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. அதோடு சர்ச்சை நிற்காமல், அதனை தொடர்ந்து பேசிய பவர்ஸ்டார், “இன்னும் காலம் இருக்கின்றது, திருமணம் நடைபெற வாய்ப்பிருக்கின்றது. நடந்தால் நன்றாகத்தான் இருக்கும்.அடுத்து முறை பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வரும்போது, வருபவர்கள் மொய் கவர் எடுத்து வரவும்” என நக்கலாக பேசியுள்ளார். வனிதா மற்றும் ஸ்ரீனிவாசனின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், சர்ச்சையை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இவர் முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். அந்த திருமணம் முறிந்துவிட ஆனந்த்ராஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. அந்த சர்ச்சை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஊடே எதிரொலித்தது. வனிதாவால் அந்த எபிஸோட் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டியது. செட்டுக்கே போலீஸார் தேடிவர பரபரப்பாக பேசப்பட்டார் வனிதா.