தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு திரை குடும்பத்தின் வாரிசான வனிதா விஜயகுமார் தனது குடும்பத்தை பிரிந்து மகள்களுடன் தனித்து வாழ்ந்து வருகிறார். வனிதாவின் மூத்த மகன் ஸ்ரீஹரி தற்போது தனது தந்தை ஆகாஷுடன் வாழ்ந்து வருகிறார். மகன் ஸ்ரீஹரியின் புகைப்படத்தை தனக்கே தெரியாமல் 'லியோ' படத்தில் பயன்படுத்தி இருப்பதை நினைத்து பெருமையாக கருதுகிறேன் என கூறி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய்க்கு தனது நன்றிகளை எக்ஸ் தள பக்கம் மூலம் தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார். இது குறித்த அவர் அளித்த விளக்கம் தான் சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. 


லியோவின் வெற்றி : 


7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'லியோ'. திரிஷா, அர்ஜுன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் மற்றும் பலர் நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியிலும் சாதனையை படைத்தது வருகிறது. 



லியோவில் வனிதா மகன் :


இப்படத்தில் எண்ணற்ற நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் என்றாலும் அதில் நடிகை வனிதா விஜயகுமாரின் மூத்த மகன் ஸ்ரீஹரியும் நடித்துள்ளார் என்பது ஒரு சர்ப்ரைஸ் எலிமெண்ட். லியோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் "நான் லியோ தாஸ் இல்லை" என நிரூபிப்பதற்காக நடிகர் விஜய், அர்ஜுனிடம் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை காண்பிப்பார். அந்த புகைப்படத்தில் சிறிய பையனாக இருப்பது வனிதாவின் மகன் ஸ்ரீஹரி. 


வனிதாவின் கருத்து :


இந்த விஷயம் பற்றி வனிதாவுக்கே தெரியாது என்பதால் ஸ்ரீஹரியின்  புகைப்படம்  லியோ படத்தில் இடம்பெற்று இருப்பதை பார்த்து வியந்துள்ளார் வனிதா. "பொதுவாக இறந்து போனவர்களின் புகைப்படங்களை தான் பயன்படுத்துவார்கள். அந்த நபரே உலகில் இல்லை என்பதால் அதை பயன்படுத்துவதற்காக யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை. அப்படிப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தும்போது பார்வையாளர்களுக்கு ஒரு ரிச் பீல் கிடைக்கும். 



லியோ படத்தில் பயன்படுத்தப்பட்ட ஸ்ரீஹரியின் புகைப்படம் அவனது முதல் பிறந்தநாள் அன்று எடுக்கப்பட்டது. அந்த புகைப்படத்தை படத்தில் பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என தனது கருத்தை தெரிவித்து இருந்தார் வனிதா விஜயகுமார். 


இன்று ஒரு ஹீரோ போல காட்சி அளிக்கும் ஸ்ரீஹரி ஒரு குழந்தை நட்சத்திரமாக பல படங்கள், குறும்படங்களில் நடித்துள்ளார். நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான 'சகுனி' படத்தில் கார்த்தியின் சிறுவயது கேரக்டராக ஸ்ரீஹரி நடித்திருந்தார். வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ஸ்ரீஹரிக்கு ஒரு நடிகனாக வேண்டும் என்பதே ஆசையாம்.