தமிழ் சினிமாவின் பழம்பெரும் பின்னணிப் பாடகியான வாணி ஜெயராம் பிப்.04ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.


தமிழ் உள்ளிட்ட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மொழிகளில் பாடிய வாணி ஜெயராம் 3 முறை தேசிய விருதுகள், பாரத ரத்னா, பத்ம பூஷண் என பல விருதுகளை வென்றுள்ளார்.


தலையில் அடிபட்ட நிலையில் உயிரிழப்பு


இறப்பதற்கு முந்தைய வாரம் தான் அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், அப்போது நல்ல உடல்நலனுடன் பாட்டுப் பாடி வீடியோ பகிர்ந்து தனக்கு விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.


அதன்பிறகு ஒரு வார காலத்திலேயே வாணி ஜெயராம் திடீரென உயிரிழந்ததும், அவரது தலையில் அடிபட்டிருந்ததும் இது இயற்கைக்கு மாறான மரணமா என சந்தேகங்களை எழுப்பியது.


2018-ஆம் ஆண்டு தன் கணவர் உயிரிழந்த பின் வாணி ஜெயராம் தனியாகவே வசித்து வந்துள்ளார்.  உயிரிழந்த அன்று அவரது வீட்டுக்கு வேலைக்குச் சென்ற மலர்க்கொடி எனும் பெண் பலமுறை காலிங் பெல் அடித்தும் கதவு திறக்கப்படாத நிலையில், ஃபோன் அடித்து பார்த்தபோது அதையும் வாணி ஜெயராம் எடுக்கவில்லை.


இறப்பில் சந்தேகம்?


இதனையடுத்து அவரது வீட்டின் கீழ்தளத்தில் வசிப்பவர்கள் காவல் துறையினருக்கும் வாணி ஜெயராமின் சகோதரிக்கும் தகவல் தர தொடர்ந்து அவர்கள் வந்து படுக்கையறையை உடைத்து பார்த்தபோது வாணி ஜெயராம் நெற்றியில் காயத்துடன் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், முன்னதாக தடயவியல்துறை அறிக்கை, உடற்கூராய்வு ஆகியவற்றின் அடிப்படையில் வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை எனக் காவல்துறை தகவல் தெரிவித்திருந்தது. 


இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வாணி ஜெயராமின் முதல் தகவல் அறிக்கையில் வாணி ஜெயராமின் மரணத்தில் சந்தேகமில்லை என்பது உறுதியாகியுள்ளது.முதல் தகவல் அறிக்கையில், வாணி ஜெயராமின் அண்ணன் மகனான ஸ்ரீராம் என்பவர் காவல் துறையினரிடம் பகிர்ந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.


முதல் தகவல் அறிக்கை


அதன்படி, “எனது அத்தை வாணி ஜெயராம், மற்றொரு அத்தையான உமா உள்ளிட்டோர் சென்று கதவைத் திறந்து பார்த்தபோது கட்டிலின் அருகில் டீபாயில் இடித்து அடிபட்ட நிலையில் ரத்தம் உறைந்த நிலையில் இறந்து கிடந்தார்.


தொடர்ந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் பரிசோதித்தது ஏற்கெனவே அத்தை இறந்துவிட்டதாகக் கூறினர். எனது அத்தை நெற்றியில் அடிபட்டு ரத்தம் அதிகமாக வெளியேறியதால் உயிரிழந்துள்ளார். அவரது இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை” என காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். 






பிப்.05-ஆம் தேதி காவல் துறையினரின் மரியாதையுடன் வாணி ஜெயராம் உடலை நல்லடக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில், 30 குண்டுகள் முழங்க அவரது உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் எனப் பலரும் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.


மல்லிகை என் மன்னன் மயங்கும்’, ‘மேகமே மேகமே...’ ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’ ஆகிய பாடல்களுக்காக பெரிதும் அறியப்பட்ட வாணி ஸ்ரீராம், பத்ம பூஷண் விருதைப் பெறுவதற்கு உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.