எனக்கு ஆலியா பட் நடித்த கங்குபாய் கேரக்டர் போன்ற போல்டான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று கூறியுள்ளார் நடிகை வாணி போஜன்.


அண்மையில் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ். மொத்தம் 8 அத்தியாயங்கள் கொண்ட இதில், காவல் துறை அதிகாரியாக முக்கியமான கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார் அருண் விஜய். அவருடன் வாணி போஜன் மற்றும் ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ளார். இந்த சீரிஸ் ஆகஸ்ட் 19ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை முறைகேடாக இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதால் தயாரிப்பளர்கள் எப்படி எல்லாம் இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது என்பதை தெளிவாக விவரிக்கும் வெப் சீரிஸ் தான் தமிழ் ராக்கர்ஸ்.  


அண்மையில் வாணி போஜன் இந்த வெப் சீரிஸ் பற்றி ஒரு யூடியூப் சேனலில் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் பல்வேறு சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்தார்.




கங்குபாய் மாதிரி ரோல் பண்ணனும்..


நான் ஆரம்பத்தில் இருந்தே போல்டான ரோல் பண்ணியிருக்கிறேன் என்றுதான் சொல்வேன். எனக்கு பிரேக் கொடுத்த படம் ஓ மை கடவுளே. அந்தப் படத்தில் நான் மீரா ரோல் தான் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கினேன். அப்போது டைரக்டர், எல்லோரும் இந்த ரோல் வேண்டாம் என்றார்கள். ஆனால் நீங்கள் தான் போல்டா ஏத்துக்கிட்டீங்க என்றார். மீரா அக்கா என்ற அந்த ரோல் தான் எனக்கு பிரேக் கொடுத்தது. இப்போ தமிழ் ராக்கர்ஸில் ஒரு ஃபரன்சிக் அதிகாரியாக நடித்துள்ளேன். இதுவும் துணிச்சலான ரோல் தான். ஆனால் எனக்கு கங்குபாய் கத்தியாவாடி படம் பார்த்தபோது அவ்வளவு பிரமிப்பாக இருந்தது. இவ்வளவு சின்ன ஃபிரேம்ல ஒரு சின்னப் பொண்ணு என்ன மாதிரி நடிக்கிறாங்க என்று வியப்பாக இருந்தது. அதுபோன்ற கேரக்டரில் நடிக்க வேண்டும்.


நான் சில ஹீரோஸை ரிஜக்ட் பண்ணியிருக்கேன்..
நான் சீரியலில் இருந்து வந்தவள் என்பதற்காகவே என்னை எத்தனை ஹீரோஸ் புறக்கணித்தார்கள் தெரியுமா ? சில படங்களில் கையெழுத்து போடப்போகும் கடைசி நிமிடத்தில் கூட , இவங்க சீரியல் ஆர்டிஸ்டாச்சேன்னு சொல்லி வேண்டாம்னு சொல்லியிருக்காங்க. என்னுடைய நடிப்பை பார்க்காமல் , நான் எங்கிருந்து வந்தேன் என்பதைத்தான் பார்த்தாங்க. அதிர்ஷ்டவசமா எனக்கு விதார்த் கூட நல்ல ரோல் கிடைச்சது. அதே ஹீரோஸ்  படங்களை இப்போ நான் நிராகரிச்சுட்டேன். காரணம் எனக்கு அவங்க அப்போ மரியாதை தரவில்லை. எனக்கு அவங்களோட நடிக்க வேண்டாம்.


அருண் விஜய் ரொம்ப சிம்பிள்
நடிகர் அருண் விஜய் ரொம்ப டவுன் டூ எர்த், சிம்பிள் பெர்சன். அவர் ஒரு பெரிய ஸ்டாரோட வாரிசாக இருந்தாலும் கூட இண்டஸ்ட்ரியில் ரொம்பவே ஸ்டரகிள் பண்ணியிருக்கிறார். அவரோட போராட்டம் என்னைப் போன்றோருக்கு ஒரு ஊக்க சக்தி தான். அப்புறம் அவர் உடல் வாகை மெயின்டெய்ன் செய்யும் விதம் சான்ஸே இல்லை என்று சொல்வேன். அவருக்கு வயதாகிறதா என்றே எனக்கு சந்தேகமாக இருக்கும்.


டிவியில் தான் நடிப்பை கத்துக்கிட்டேன்..
நான் டிவியில் தான் நடிப்பை கற்றுக் கொண்டேன். ஐந்து வருட சீரியல் வாழ்வு எனக்கு ஸ்கூல் செல்வது போல் நடிப்பைக் கற்றுத் தந்தது. அதனால் இப்போது படங்களில் டேக் வாங்காத நடிகையாக, இயக்குநர்கள் விரும்பும் அவுட்புட் தரும் நடிகையாக இருப்பதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.
இவ்வாறு வாணி போஜன் கூறியுள்ளார்.