பிப்ரவரி 24 ல் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்த நாளிலிருந்து, அடுத்தடுத்து அப்டேட்டுகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர். எந்த அளவிற்கு அப்டேட் இல்லாமல் வலிமை திரைப்படம் இருந்ததோ, அந்த அளவிற்கு போதும் போதும் என்றி அளவிற்கு அப்டேட்டுகள் குவிந்து கிடக்கின்றன.
இன்னும் இரண்டு நாட்களில் வெள்ளத்திரையில் துள்ளி வரவிருக்கும் வலிமை படத்தை தமிழ்நாடு மட்டுமல்லாது உலகமெங்கும் இருக்கும் அஜித் ரசிகர்கள் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். 3 ஆண்டுகளுக்குப் பின் அஜித் நடிப்பில் வெளிவரவிருக்கும் வலிமையின் தியேட்டர் புக்கிங் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. வியாழனில் தொடங்கி, ஞாயிறு வரை விழாவே இல்லாமல் திருவிழாக்கோலம் பூண்டுவிட்டது தமிழ்நாடு.
மீண்டும் ஒருமுறை தன்னை ஓப்பனிங் கிங் என்று நிரூபித்துவிட்டார் அஜித். ஆனால், இந்த வெற்றியை இன்னும் இமயத்திற்கு கொண்டு செல்ல தயாராகி வருகிறது தல படை. அவர்கள் ஒருபறம் ஆர்ப்பரிக்க, இன்னொரு புறம் அவர்களை வெறி ஏற்றிக் கொண்டிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய், படத்தின் ப்ரொமோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் போனி கபூர்.
தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ள வலிமை படத்தின் விளம்பரம், வேறு லெவலில் சென்று கொண்டிருக்கிறது. அதில் முக்கிய பங்காற்றுபவர், போனி கபூர். ஆக்ஷன் சரவெடியாக களமிறங்கும் வலிமையின், ஆக்ஷன் காட்சிகளை துண்டு, துண்டாக பதிவிட்டு வருகிறார். நீண்ட நாட்களுக்குப் பின் அஜித்தின் ஆக்ஷன் முழுசாப்பாடாக வலிமை இருக்கும் என்பதை, அந்த காட்சிகள் மூலம் அறிய முடிகிறது.
கட்அவுட் வைப்பது, தியேட்டரில் பாலாபிஷேகம் செய்வது, டிக்கெட் எடுப்பதையே திருவிழாவாக கொண்டாடுவது என ஒரு புறம் அஜித் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்க, மற்றொரு புறம் ப்ரொமோக்களை போட்டு அவர்களை வெறியேற்றிக் கொண்டிருக்கிறார் போனி கபூர். இன்னும் இரண்டு நாட்களில் இன்னும் எத்தனை பதிவுகளை போனி கபூர் போடப்போகிறார். படம் போனி ஆன பிறகும், அவரின் அடுத்தடுத்த பதிவுகள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்