ஜனவரி 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திட்டமிட்டப்படி வலிமை ரிலீசாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.


முன்னதாக, ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டவர் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். 'பிங்க்' படத்தின் ரீமேக்கான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து 'வலிமை' படத்திலும் அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி இணைந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்ததால் அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களிடமெல்லாம் வலிமை அப்டேட் குறித்து கேட்டு வந்தனர். 






இப்படிப்பட்ட சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. இதனையடுத்து படத்தின் ஒரு பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, படத்தின் Glimpse வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு எடுத்து சென்றது என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து  ‘ நாங்க வேற மாறி’, அம்மா ஆகிய இருபாடல்கள் வெளியிடப்பட்டது.  அதனைத் தொடர்ந்து படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஜனவரி 13-ஆம் தேதி படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளது. 





தமிழ்நாடு அரசும் தியேட்டர்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. இதனால் படம் திட்டமிட்டப்படி வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து தெரிவித்த படத்தின் இயக்குநர் வினோத், தியேட்டர் ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் தான் முடிவு செய்யும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜனவரி 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திட்டமிட்டப்படி வலிமை ரிலீசாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிபட  தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள  ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. கொரோனா, ஒமிக்ரான் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் படம் ஒத்திவைக்கப்பட்டது.  எனவே வலிமை சோலோ ரிலீசாக பொங்கலுக்கு களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


போனிகபூர் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான‘ஆர்டிகிள் 15’படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை உதயநிதி நடிப்பில் போனிகபூர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண