காதல் வாழ்க்கையை வெற்றிக்கரமாக கொண்டு போக வாழ்க்கையில் என்ன தேவை என்பது குறித்து சூர்யா - ஜோதிகா தம்பதியினர் பல நேர்காணல்களில் தெரிவித்துள்ளனர்.
காதலர் தினம்
உலகம் முழுவதும் காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வெற்றியோ, தோல்வியோ நாம் அனைவருமே காதலிக்க ஆசைப்படுகிறோம். காதல் வாழ்க்கையில் வெற்றிகரமாக செல்பவர்களை நமக்கு ரோல் மாடலாக கொண்டு நாமும் அப்படி வெற்றிநடை போடவே விரும்புகிறோம். பலருக்கும் காதல் எடுத்தவுடன் கிடைக்காது. கண்டிப்பாக அதற்கு ஒரு பொறுமை, நீண்ட போராட்டம் என காதல் வாழ்க்கையை திரும்பி பார்த்தால் அதில் அவ்வளவு மேஜிக் நிறைந்திருக்கும்.
தமிழ் சினிமாவின் காதல் ஜோடிகள் என்றால் சட்டென நினைவுக்கு வருபவர்களில் ஒரு தம்பதி சூர்யா - ஜோதிகா. சொல்லப்போனால் இந்த ஜோடி தான் காதலிப்பவர்கள் பலருக்கும் ரோல்மாடலாக இருப்பவர்கள். couple goals என்றால் அது சூர்யா - ஜோதிகா மட்டும் தான் என முடிவே செய்துவிட்டார்கள்.
ரீல் ஜோடியாக சூர்யா - ஜோதிகா
நடிகர் சிவகுமாரின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவுக்கு எண்ட்ரீ கொடுத்த சூர்யா, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக திகழ்கிறார். இதேபோல் ஜோதிகா வாலி படத்தின் மூலம் அறிமுகமானாலும், ஹீரோயினாக “பூவெல்லாம் கேட்டுப்பார்” படம் தான் அவருக்கு முதல் படமாக இருந்தது.
இருவரும் அதன் பின்னர் உயிரிலே கலந்தது, காக்க காக்க, மாயாவி, ஜூன் ஆர், சில்லுன்னு ஒரு காதல், பேரழகன் ஆகிய 7 படங்களில் ஜோடியாக நடித்தனர். இதில் காக்க காக்க பட சமயத்திலேயே சூர்யா - ஜோதிகா காதல் விவகாரம் வெளியே கசிய தொடங்கியது. அதன்பின்னர் 4 ஆண்டுகள் கழித்து 2007 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு தேவ், தியா என இரு குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து 36 வயதினிலே படம் மூலம் ஜோதிகா சினிமாவில் நடிக்க தொடங்கினார். தொடர்ந்து நடித்து அவரின் பல படங்களை சூர்யாவே தயாரித்துள்ளார்.
வெற்றிக்கான சீக்ரெட் சொன்ன சூர்யா..
ஒரு நேர்காணலில் நெறியாளர் சூர்யாவிடம், couple goals என்ற வகையில் உங்களிடம் ஜோதிகாவிடமும் கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. அதை பத்தி என்ன நினைக்கிறீங்க என கேள்வியெழுப்புகிறார். அதற்கு சூர்யா சற்றும் சளைக்காமல், மூன்று விஷயங்கள் மட்டும் தான் அதற்கு காரணம் என நினைக்கிறேன். முதலாவது காதல், இரண்டாவது நிறைய புரிந்துகொள்ளும் திறன், 3வது நிறைய பாசிட்டிவ் எண்ணம் இதுமட்டும் தான் தேவை என சூப்பரான பதிலை கொடுத்துள்ளார்.
விட்டுக்கொடுக்காத ஜோதிகா
இதேபோல் ஜோதிகாவும் பல பேட்டிகளில் சூர்யாவை எங்கேயும் விட்டுக் கொடுக்காமல் பேசுவார். கண்டிப்பாக விளையாட்டாக கூட காதல் திருமணம் செய்தவர்கள் பலரும் சில மறக்க முடியாத நினைவுகளை கூறுவார்கள். ஆனால் ஜோதிகாவோ, சூர்யா எனக்கு வெறும் கணவர் இல்லை. என் வாழ்க்கையின் காட்ஃபாதர். அப்பா, நண்பர், கணவர் என எல்லாமுமாக எனக்கு இருக்கிறார். என்னிடம் இதுவரை ஒரு கப் காஃபி கூட போட சொல்லி சொன்னது இல்லை. யாருமே என்னை எதுவுமே பேச விடாத அளவுக்கு என்னை பார்த்துக் கொள்வார். இந்த மாதிரி ஒருவரை பார்த்தது இல்லை என கூறியுள்ளார்.
பூவெல்லாம் கேட்டுப்பார் படம் பண்ணும் போது சூர்யா என்னிடம் குறைவாகவே பேசினார். அதுவே எனக்கு பிடித்து விட்டது. ஒரு லிமிட் தாண்டி என்னிடம் பேசவே இல்லை. இருவரும் இணைந்து 7 படங்கள் நடித்தோம். பெண்ணுக்கு கொடுத்த மரியாதையே அவரை பிடிக்க வைத்தது. சூர்யா எனக்கு முதன்முதலாக பிளாட்டினம் செயினம், கருப்பு முத்து வைத்த கொலுசை பரிசாக கொடுத்தார். மேலும் கணவன் - மனைவிக்குள் என்றைக்கும் ஒரு நட்பு இருக்கணும். ஒரு நாளில் நாங்கள் இருவரும் அன்றைய நாளில் நடந்தது பற்றி பேசுவோம் என ஜோதிகா தெரிவித்திருந்தார்.