காதலர் தினத்தை முன்னிட்டு தமிழில் கட்டாயம் பார்க்க வேண்டிய டாப் 10 காதல் படங்கள் பற்றி நாம் இக்கட்டுரையில் காணலாம்.


உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  காதலில் எத்தனையோ வகைகள் உண்டு என்பதை நாம் பலரும் சினிமாவை பார்த்தே தெரிந்துக் கொண்டிருப்போம். அதேபோல் காலத்துக்கு ஏற்ற வகையில் காதல் எப்படியெல்லாம் பரிணமிக்கிறது என்பதையும் நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் டாப் 10 காதல் படங்கள் காணலாம். 


1. அலைபாயுதே


மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அலைபாயுதே. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இத்திரைப்படத்தில் மாதவன், ஷாலினி, சொர்ணமால்யா  ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை எப்போது ஒளிபரப்பினாலும் முகத்தில் புன்னகை மலர பார்க்கும் காதலர்கள் கூட்டம் இன்றைக்கும் உண்டு. அதற்கு காரணம் எப்போதும் இளமையாக திகழும் காதலை திகட்ட திகட்ட இப்படம் வழங்கியது தான். 


2. நீதானே என் பொன்வசந்தம் 


கௌதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான படம் “நீதானே என் பொன்வசந்தம்”. இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சிறுவயதிலிருந்து நண்பர்களாக பழகிய இருவருக்கு காதல் ஏற்படுவதும், பிரிவை ஏற்க முடியாமல் ஒருவரை சார்ந்து வாழ்வதால் ஏற்படும் பிரச்சினைகளையும் இப்படம் அழகாக பிரதிபலித்தது. 


3. காதல் 


பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட காதல் திரைப்படம் தமிழ் சினிமாவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2004 ஆம் ஆண்டு வெளியான இப்படம் விடலை பருவ காதலையும், ஆதிக்க சாதிகளின் வன்மத்தையும் வெட்ட வெளிச்சமாக காட்டியது. குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 


4. காதலுக்கு மரியாதை 


பாசில் இயக்கத்தில் விஜய், ஷாலினி நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான படம் “காதலுக்கு மரியாதை”. இளையராஜா இசையமைத்த இப்படம் காதலர்களிடமும், குடும்பத்தினரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மனம் ஏற்றுக்கொண்டாலும் பெற்றோரின் சம்மதம் இல்லாமல்  வாழ்க்கையில் இணையக்கூடாது என முடிவு செய்து காதலை கைவிட முடிவு செய்யும் கிளைமேக்ஸ் காட்சி பெற்றோர்களை கவர்ந்தது. இன்றைக்கும் பலரும் பெற்றோர்கள் சம்மதத்திற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள் அதனை இப்படம்  25 ஆண்டுகளுக்கு முன்பாகவே இப்படம் பிரதிபலித்தது. 


5.ஓகே கண்மணி 


காலத்துக்கு ஏற்ப காதல் கதைகளை கையாளும் மணிரத்னத்தின் படைப்புகளுள் ஒன்று துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்த “ஓ காதல் கண்மணி” படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் திருமணம் செய்யாமல் வாழும் லிவிங் டுகெதர் வாழ்க்கையும், அதில் இருக்ககூடிய சிக்கல்களையும் பேசியது.


6. மௌன ராகம் 


காதல் தோல்வியோடு மட்டுமே ஒருவர் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. அதேபோல் முன்பின் தெரியாதவர்களை எப்படி கல்யாணம் செய்வது நினைப்பவர்களுக்கும் சரி. வாழ்க்கை கணவர்/மனைவி மூலமாக அளிக்கும் அன்பையும், புரிதலையும் கனக்கச்சிதமாக இப்படம் வெளிப்படுத்தியது. மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில் மோகன், ரேவதி, கார்த்திக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 


7. சில்லுன்னு ஒரு காதல் 


கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா நடித்த படம் சில்லுன்னு ஒரு காதல். எதிர்பாராத விதமாக மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் மனைவிக்கு கணவனின் பழைய வாழ்க்கை குறித்து தெரிய வருகிறது. தன் கணவனின் விருப்பத்தை நிறைவேற்ற அவர் எடுத்த முடிவு  தான் படத்தின் கதையாக அமைந்தது. காதல் மட்டுமல்ல தம்பதியினர் தங்கள் துணையின் ஆசை, விருப்பங்களை தெரிந்து கொள்வதும், நினைச்சது கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்ததை சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அழகாக சொல்லியது சில்லுன்னு ஒரு காதல் 


8. வாரணம் ஆயிரம் 


கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இப்படம் அப்பா - மகன் பாசத்தை மையப்படுத்தியது என்றாலும், இதில் சொல்லப்பட்டிருந்த அந்த காதல் காட்சிகள் அனைவருக்குமே பொருந்திப் போகக்கூடியது. காதல் தோல்வியால் விரக்தியடையும் இளைய தலைமுறையினர் வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த  பெற்றோர்கள் சப்போர்ட் எந்த அளவுக்கு தேவை என்பது சில காட்சிகள் சொல்லப்பட்டாலும் பாராட்டைப் பெற்றது. 


9. விண்ணைத் தாண்டி வருவாயா


கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படம் சோகமான முடிவை கொண்டது. என்றாலும், காதலிப்பது மட்டுமே வாழ்க்கை இல்லை. இழப்புகள் தவிர்க்க முடியாது.  நமது கேரியரில் கவனம் செலுத்தும்போது எல்லாம் வெற்றிகரமாக அமையும் என கவிதையாக சொல்லியது இந்த விண்ணை தாண்டி வருவாயா.


10.  96


பிரேம் குமார் இயக்கிய 96 படம் காதல் பிரிவை சந்தித்த பலருக்கும் தங்களை அந்தந்த கேரக்டர்களாக நினைத்துப் பார்க்கும் அளவுக்கு எதார்த்தமாக அமைந்தது. நிச்சயம் காதலின் நினைவுகளை யாராலும் மறக்க முடியாதது. அதனோடு கடைசிவரை வாழ்பவர்களையும் நாம் நம்முடைய சமூகத்தில் காண்கிறோம். இப்படியான ஒரு கதையில் ராம், ஜானுவாக விஜய் சேதுபதி, த்ரிஷா வாழ்த்திருந்தனர் என்றே சொல்லலாம்.