காதலர் தினத்தை முன்னிட்டு பழைய காதல் படங்களை திரையிட தியேட்டர்கள் முன்வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


காதலர்களுக்கு இடையே வருடம் 365 நாட்கள்  அன்பு இருந்தாலும், பிப்ரவரி மாதத்தில் வரும் காதலர் தின  என்பது எப்போதும் ஸ்பெஷல் தான். காரணம் பிப்ரவரி 14 ஆம் தேதி தான் காதலர் தினம் என்றாலும் ஒரு வாரம் முன்னதாகவே காதலர் தினத்திற்கான கொண்டாட்டங்கள் தொடங்கி விடும். ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, பிராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே, காதலர் தினம் என அந்த வாரமே எப்போதும் ஸ்பெஷல் தான்.. 


பல இடங்களிலும் காதலர் தினத்திற்கான கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில், தியேட்டர்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட காதல் படங்களை மீண்டும் திரையிட முடிவு செய்துள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கியுள்ள நிலையில், என்னென்ன திரைப்படங்கள் வெளியாகவுள்ளது என்பதை காணலாம். 


1.  தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே


1995 ஆம் ஆண்டு இந்தியில் ஷாரூக்கான், கஜோல் நடிப்பில் வெளியான படம் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’. இயக்குநர் ஆதித்யா சோப்ராவின் முதல் படமே அவருக்கு பம்பர் ஹிட்டாக அமைந்தது. ஷாரூக்கான் ராஜ் என்ற கேரக்டரிலும், சிம்ரன் என்னும் கேரக்டரில் கஜோலும் நடித்தது இன்றளவும் மறக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. இந்தி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து மொழி ரசிகர்களையும் இப்படம் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


2. டைட்டானிக் 


1997 ஆம் ஆண்டு இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான ஹாலிவுட் படமான டைட்டானிக் உண்மையான கப்பல் விபத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. உண்மையான காதலை மையமாக கொண்ட இப்படம் உலக சினிமா ரசிகர்களிடம் நீங்கா இடம் பிடித்தது. அந்த காலக்கட்டத்தில் உலகளவில்  அதிகமான வசூல் செய்த படம் என்ற பெருமையை டைட்டானிக் பெற்றது. மேலும் ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளை டைட்டானிக் படம் வென்றிருந்தது. 


3. மின்னலே 


2001 ஆம் ஆண்டு இயக்குநர் கௌதம் மேனனின் முதல் படமாக மின்னலே வெளியானது. இந்த படத்தின் மாதவன் ஹீரோவாக நடிக்க, ரீமாசென் ஹீரோயினாக நடித்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் எல்லாம் இன்றளவும் பலரின் பேவரைட் ஆக உள்ள நிலையில் இப்படம் 90ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலம். 


4. விண்ணை தாண்டி வருவாயா


இயக்குநர் கௌதம் மேனனின் மற்றொரு காதல் படைப்பாக 2010 ஆம் ஆண்டு வெளியானது விண்ணை தாண்டி வருவாயா. சிம்பு, த்ரிஷா நடிப்பில் உருவான இப்படம் 90ஸ், 2கே கிட்ஸின் சிறந்த காதல் படங்களில் ஒன்றாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் எப்போது டிவியில் ஒளிபரப்பினாலும் ஒரு கூட்டம் மிஸ் பண்ணாமல் பார்க்கும் அளவுக்கு பிரபலமானது. 


5. பிரேமம் 


2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, நடிகைகள் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவான படம் “பிரேமம்”. கிட்டதட்ட தமிழில் வெளியான ஆட்டோகிராஃப் படத்தின் தழுவல் என சொல்லப்பட்டாலும், அதில் சொல்லப்பட்ட ஒருதலைக் காதலும், மலர் டீச்சர் கதாபாத்திரமும் என்றைக்கு மறக்க முடியாதது. 


6. ஹ்ருதயம்


ஆட்டோகிராஃப், பிரேமம், அட்டக்கத்தி பட வரிசையில் வாழ்க்கையின் படிநிலைகளை எமோஷனல் காட்சிகளுடன் காட்டும் படமாக ஹ்ரிதயம் வெளியானது . ப்ரணவ் மோகன்லால், கல்யாணி ப்ரியதர்ஷன், அஷ்வத் லால், அஜு வர்கீஸ், காளேஷ் ராமானந்த் என பலரும் இப்படத்தில் நடித்த நிலையில் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார். 


இந்த படங்கள் குறிப்பிட்ட காட்சிகள் மட்டுமே திரையிடப்படுவதால் காதலர் தினத்தில் உங்கள் துணையுடன் சென்று தவறாமல் பார்ப்பது மறக்க முடியாத நிகழ்வாக அமையும்.