Valentine's Day: இதயம் முதல் ஷாஜஹான் வரை.. டாப் 7 ஒரு தலைக்காதல் படங்கள்!
காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ் சினிமாவின் தரமான 7 ஒரு தலைக்காதல் படங்களின் பட்டியலை கீழே காணலாம்.

பிப்ரவரி மாதம் வந்தாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது காதலர் தினமே ஆகும். தமிழ் சினிமா உள்பட உலக சினிமாக்கள் காதலையே மையமாக கொண்டு உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவையும், காதலையும் பிரிப்பது என்பது இயலாத ஒன்று என்றே கூறலாம்.
இந்த நிலையில், தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஒரு தலைக் காதல் படங்களின் பட்டியலை கீழே காணலாம்.
1. ஒரு தலை ராகம்:
தமிழ் சினிமாவில் இன்று வரை ஒரு தலைக்காதல் என்றால் அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது ஒரு தலை ராகம். 1980ம் ஆண்டு மே 2ம் தேதி வெளியான இந்த படத்தை டி ராஜேந்தர் இயக்கியிருப்பார். கல்லூரியில் படிக்கும் சக மாணவன் ராஜா தன் மீது காதல் கொண்ட பிறகு, அவன் மீது காதல் வயப்படும் சுபத்ரா குடும்ப சூழலால் தன் காதலை வெளிப்படுத்த முடியாமல் படும் அவதியையும், ராஜா அனுபவிக்கும் வேதனையையும் அழகாக சொன்ன திரைப்படம். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
2. மூன்றாம் பிறை:
கமல்ஹாசன் திரைவாழ்வில் தவிர்க்கவே முடியாத காவியம் மூன்றாம் பிறை. பாலுமகேந்திரா இயக்கிய இந்த படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீது பாசம் காட்டும் கமல், பின்னாள் அந்த பெண்ணின் மீது கொண்ட அன்பு காதலாக மாற அந்த பெண் குணம் அடைந்து கமலையே யாரென்று தெரியாத நிலை உருவாகும். இந்த படத்தின் கிளைமேக்ஸ் இன்றும் மறக்க முடியாத காட்சியாகும். 1982ம் ஆண்டு வெளியான இந்த படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
3. இதயம்:
காதலியிடம் காதலைச் சொல்லாத அனைவரையும் இதயம் முரளி என்றே கூறுவது வழக்கம். கதிர் இயக்கிய இந்த படத்தில் மருத்துவ கல்லூரி மாணவரான முரளி, நாயகி ஹீரா மீது காதல் கொண்டும் அந்த காதலைச் சொல்ல முடியாமல் தவிப்பதும், அதன்பின்பு என்ன நடக்கும் என்பதை அழகாகச் சொன்ன திரைப்படம் இதயம். 1991ம் ஆண்டு வெளியான இந்த படம் இன்றும் பிரபலம் ஆகும்.
4. பூவே உனக்காக:
விஜய்க்கு மக்கள் மத்தியில் கிடைத்த முதல் வெற்றி. தான் காதலிக்கும் பெண் வேறு ஒருவரை காதலிப்பதை அறிந்து, அவளது காதல் சேர துணை நிற்கும் காதலனின் கதையே பூவே உனக்காக. காதலின் ஆழத்தையும், மகத்துவத்தையும் சொன்ன படமாகவே இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். விக்ரம் இயக்கிய இந்த படம் 1996ம் ஆண்டு வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
5. நீ வருவாய் என:
ராஜகுமாரன் இயக்கிய இந்த படத்தில் இறந்த காதலனை நினைத்து உருகும் தனது காதலி, தன் காதலை ஏற்றுக்கொள்வாள் என்று காத்திருக்கும் காதலனைப் பற்றி கூறியிருப்பார்கள். பார்த்திபன், அஜித், தேவயானி நடித்த இந்த படம் 1999ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
6. ஷாஜகான்:
விஜய்க்கு பூவே உனக்காக போல மற்றொரு ஒரு தலைக்காதல் படம் ஷாஜகான். பல காதலர்களை சேர்த்து வைக்கும் இளைஞன் தன் நண்பனின் காதலி என்றே தெரியாமல், நாயகியை காதலிக்கிறான். இறுதி வரை சொல்லப்படாத அவனின் காதலுக்கு மத்தியில், அவர்களையும் சேர்த்து வைப்பது போல இந்த படம் இருக்கும். கே.எஸ்.ரவி இயக்கிய இந்த படம் 2001ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.
7. காதல் கொண்டேன்:
2003ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் காதல் கொண்டேன். செல்வராகவன் இயக்கிய இந்த படத்தில் யாரிடமும் நெருங்கிப் பழகாத இளைஞன் தன் வாழ்வில் முதன்முறையாக வந்த பெண் மீது காதல் வயப்படுவதும், அவள் வேறு இளைஞனை விரும்புவதும் என முக்கோண காதலாக இருக்கும். தன் காதலி தன்னை விரும்பமாட்டாள் என்பதை அறிந்த பிறகு, தன் காதலியின் காதலனின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரைத் தியாகம் செய்வது போல இந்த படம் முடியும். இந்த படம் தனுஷைப் பட்டித் தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
தமிழ் சினிமாவில் இதுபோன்று ஏராளமான ஒரு தலைக்காதல் படங்கள் வெளியாகியுள்ளது.























