வலைப்பேச்சு
ஆதாரமற்ற பல சினிமா தகவல்களை பரப்புவதற்காக தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வரும் யூடியூப் சேனல் வலைப்பேச்சு. பிஸ்மி , அந்தணன் , மற்றும் சக்திவேல் ஆகிய மூவர் இந்த சேனலின் வீடியோவில் பேசி வருகிறார்கள். சமீபத்தில் நயன்தாரா இவர்களை மறைமுகமாக குறிப்பிட்டு மூன்று குரங்குகள் என பேசியிருந்தது பரபரப்பாக பேசப்பட்டது . அந்த வகையில் தற்போது மற்றொரு சிக்கலில் வலைப்பேச்சு சேனல் சிக்கியுள்ளது.
மமிதா பைஜூவின் கவர்ச்சிப்படம்
மலையாள நடிகை மமிதா பைஜூவைப் பற்றிய செய்தி ஒன்றை வலைப்பேச்சு வீடியோவில் பேசியிருந்தார்கள். ஷங்கரின் மகன் நாயகனாக அறிமுகமாகும் படத்தில் மமிதா பைஜூ நாயகியாக நடிக்க இருப்பதாக வலைப்பேச்சு தெரிவித்தது. இந்த வீடியோவுக்கு கீழே ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட மமிதா பைஜூவின் கவர்ச்சிகரமான படம் ஒன்றை அவர்கள் பயன்படுத்தி இருப்பது ரசிகர்களிடம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக வலைப்பேச்சு சேனலின் மேல் மமிதா பைஜூ சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்ஸ் தெரிவித்து வருகிறார்கள்
மமிதா பைஜூ
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு படத்தின் மூலம் தமிழ் , தெலுங்கு ரசிகர்களிடம் பரவலாக கவனமீர்த்தவர் நடிகை மமிதா பைஜூ. ஜி.வி பிரகாஷ் நடித்த ரிபெல் படத்தில் நடித்ததைத் தொடர்ந்து தற்போது விஜயின் ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக விஷ்ணு விஷால் நடிக்கும் இரண்டு வானம் படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து பல புதிய படங்களில் மமிதா பைஜூ நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.