கோலிவுட்டில் இளம் பருவத்திலேயே திரைப்படம் மூலமாக எண்ட்ரி கொடுத்தவர் நடிகை வடிவுக்கரசி. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தூள் கிளப்பு நடிகைகளுள் நடிகை வடிவுக்கரசியும் ஒருவர். வடிவுக்கரசி இதுவரையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். வடிவுக்கரசி என்றதுமே நினைவிற்கு வருவது முதல்மரியாதை படம்தான். பாரதிராஜா இயக்கத்தில் முன்னதாகவே அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் படு பிஸியாக நடித்துக்கொண்டிருந்ததால் கால்ஷூட் பிரச்சனை காரணமாக நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் முதல் மரியாதை படத்தில் தனக்கு கிடைத்த அனுபவத்தை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார் நடிகை வடிவுக்கரசி.
அதில் "எனக்கு முதன் முதலாக ஒழுங்கா நடக்க கற்றுக்கொடுத்தவர் சிவாஜி அப்பாதான். ஒரு முறை என்னை கூப்பிட சொல்லி நீ ஒரு பொம்பள...நடையா இது கதாநாயகி ஆயிட்ட முதல்ல நடை பழகு,நளினமா நட னு சொல்லிக்கொடுத்தார் சிவாஜி. அதன் பிறகு முதல் மரியாதை படத்தில் அவருடன் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. நான் ரொம்ப சந்தோஷமா ஒப்புக்கொண்டேன். என்னுடைய நிறமும் தோற்றமும் கதாபாத்திரத்துக்கு சரியாக இருப்பதாகக் கூறித்தான் இயக்குநர் என்னை தேர்வு செய்தார். அதன் பிறகு மேக்கப் போடும் பொழுது காதில் தங்கட்டி போட டயர் டியூபைதான் பயன்படுத்தினார்கள். இரண்டு மூக்கும் இந்த படத்திற்காக குத்தினேன். ஆனால் அதை பற்றியெல்லாம் நான் கவலை படவில்லை காரணம் எனக்கு சிவாஜி அப்பா கூட ஜோடியா நடிச்சா போதும்னு இருந்தது. மேக்கப்பெல்லாம் போட்டு தயாரானதும், முதல் டயலாக்கை சொன்னார் இயக்குநர். இது யார் பேசுவாங்க என கேட்டேன் . நீதான் என சொன்னதும் எனக்கு அழுகையே வந்துடுச்சு . என்னால இப்படி வீரியமா பேசமுடியாது. தங்கப்பதக்கம் கே.ஆர்.விஜயா மாதிரி நடிக்கலாம்னு நினைத்தேன்.
இப்படியான கதாபாத்திரத்தை கொடுத்துவிட்டீர்களே என அழுதேன். அதன் பிறகு பாரதிராஜா மீது இருந்த கோவத்தில்தான் ஒவ்வொரு சீனும் நான் நடித்தேன். அந்த படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. முதல் மரியாதை என் வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்த படம் . இப்போது அந்த படத்தை பார்க்கும் பொழுதெல்லாம் . இந்த காட்சியெல்லாம் இன்னும் அழகா நடித்திருக்கலாமே என எண்ணியதுண்டு. இப்போது பல இயக்குநர்கள் அந்த கதாபாத்திரத்தை முன் உதாரணமாக கூறி , கதாபாத்திரங்களை விளக்குவதாக சொல்வார்கள் . ரொம்ப பெருமையா இருக்கும். அந்த படத்திற்கு பிறகு படிக்காதவன் படத்தில் மீண்டும் சிவாஜி அப்பாக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதும் இதே போன்ற ரூடான கேரக்டர்தான் ஆனால் சிட்டியில் இருக்கும் பெண் “ என தனது முதல் மரியாதை அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார் நடிகை வடிவுக்கரசி.