தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பொக்கிஷங்களில் ஒருவர் நடிகை வடிவுக்கரசி. ஹீரோயின் முதல் வில்லி வரை பல தரப்பட்ட கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கிய கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் வடிவுக்கரசி அன்று முதல் இன்று வரை பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். 


 



கருடன்:


தற்போது சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் 'கருடன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை வடிவுக்கரசி. துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'கருடன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, வெற்றிமாறன், வடிவுக்கரசி  உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 


இந்த விழாவில் நடிகை வடிவுக்கரசி பேசுகையில் இந்த படத்தில் நான் கடைசி நிமிடத்தில் தான் ஒப்பந்தமானேன். இன்று எனக்கு அழைப்பு வருகிறது நாளை நான் ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன். என்னுடைய கேரக்டர் பற்றி மட்டும் தான் எனக்கு தெரியும் அதை தவிர படத்தின் கதை என்ன? யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது எல்லாம் எனக்கு தெரியாது. 


 



சூரி ஹீரோ என்பது ஆச்சரியம்:


சூரி தம்பி தான் இந்த படத்தின் ஹீரோ என்பது தெரிந்ததும் எனக்கு ஒரே ஆச்சரியமாக போனது. விடுதலை படத்தை நான் என்னுடைய வீட்டில் இருந்து தான் பார்த்தேன். வாத்தியாரை தேடும் காட்சியில் சூரி நடித்ததை பார்த்து மலைத்து போனேன். இது சூரி தானா? இல்லை வேற யாராவது ஒரு ஹீரோவா? என ஒரு நிமிடம் சந்தேகமாகவே போனது.


ஒரு காமெடி நடிகரை எப்படி இப்படி நடிக்க வைக்க முடியும், அதை எப்படி இயக்குநர் வெற்றிமாறன் யோசித்து நடிக்க வைத்தார் என்பது எனக்கு வியப்பாக இருந்தது. சூரி உள்ளே இப்படி ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட் இருப்பதை வெளி கொண்டு வந்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு என்னுடைய நன்றிகள். 


 



 


காமெடி பண்ணிட்டு இருந்த சூரியை இந்த படத்தில் பிழிந்து எடுத்து இருக்கிறார்கள். சமீபத்தில் நான் நடித்ததிலேயே மிகவும் சந்தோஷமாக நடித்த படம் 'கருடன்'. ஒரு டீம் முழுவதும் சந்தோஷமாக அந்த ப்ராஜெக்டை செய்தால் அது நிச்சயம் ஒரு வெற்றிப்படமாக அமையும். 


இதுவரையில் நான் கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடனும் நடித்துவிட்டேன். ஆனால் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் எனக்கு கிடைக்கவே இல்லை. பல முறை நான் அணுகியும் எனக்கு வாய்ப்பு தரவே இல்லை. இதை விட ஓப்பனா நான் எப்படி சான்ஸ் கேட்பது என எனக்கு தெரியவில்லை. அடுத்த படம் அடுத்த படம் என்று சொல்கிறார்களே தவிர வாய்ப்பு மட்டும் கொடுக்கவில்லை. பேசாமல் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தில் போய் சேர்ந்து விடலாம் என கூட யோசிக்கிறேன் என வடிவுக்கரசி பேசி இருந்தார்.  உடனே எழுந்து ஓடி வந்த சிவகார்த்திகேயன், வடிவுக்கரசி கையை பிடித்து நிச்சயம் நீங்க என்னோட அடுத்த படத்தில் நடிக்கிறீங்க என சொல்லிவிட்டு சென்றார்.