ஒரு காலகட்டத்தில் வைகை புயல் வடிவேலு இல்லாத படங்களே இல்லை என்ற அளவிற்கு படு பிஸியாக தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. தமிழ் சினிமாவில் மிக முக்கியமான அடையாளமாக விளங்கிய வடிவேலு சினிமாவில் இருந்து விலகி இருந்த காலகட்டத்தில் கூட மீம் கிரியேட்டர்களுக்கு ஆபத்பாந்தவன் இருந்தார். தன்னை தானே கலாய்த்து கொள்வாரே தவிர யாரையும் நோகடிக்கும் வகையில் அவரது நகைச்சுவை இருக்காது. இது அவரிடம் இருந்த ஒரு பிளஸ் பாயிண்ட். அவரின் ஸ்பான்டேனியஸ் ரியாக்ஷனை, பாடி லாங்குவேஜை ரசிகர்களால் ஒருபோதும் மறக்க இயலாது.
வடிவேலுவின் ரீ என்ட்ரி :
நான்கு ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு வடிவேலு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க போகிறார் என்று தெரிந்ததும் அவரின் ரசிகர்கள் பேரானந்தத்தில் குதித்தனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் தொடர்ந்து அவர் ஏராளமான படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
நடிப்பின் மூலம் பதிலடி :
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் நடிகர் வடிவேலு தான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நிச்சயம் அவரின் நடிப்பு திறமைக்கு தீனியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் சார்ந்த இப்படத்தில் அவர் சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
நடவடிக்கை சரியில்லை :
வடிவேலுவின் ரீ என்ட்ரி அவரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும் அவருடன் இணைந்து நடித்த பலரும் அவரை பற்றியும் அவரின் நடவடிக்கைகள் குறித்தும் பல குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சற்று அதிர்ச்சியை கொடுக்கிறது. சமீபத்தில் கூட சந்திரமுகி 2 படத்தை இயக்கி வரும் இயக்குநர் பி. வாசு, வடிவேலு சரியாக படப்பிடிப்பில் கலந்து கொள்வது இல்லை என்பதால் மிகவும் டென்ஷன் ஆனார் என கூறப்பட்டது.
அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் :
வடிவேலுவுடன் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்த மீசை ராஜேந்திரன், கொட்டாங்குச்சி, சிஸ்சர் மனோகரன் என பலரும் அவர் பற்றி பலவிதமான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலின் போது பல படங்களில் காமெடியனாக நாம் பார்த்து பழகிய ஒரு முகமான பாவா லட்சுமணன் பேசுகையில் கொரானாவால் நான் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக தகவல்கள் பரவி கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் எல்லாம் ஓட்டினார்கள். இப்படி ஒரு செய்தி பற்றி கேள்விப்பட்டு போன் மூலம் கூட வடிவேலு விசாரிக்கவில்லை ஆனால் நடிகர் சந்தானம் போன் மூலம் விசாரித்ததாக கூறி ஆதங்கப்பட்டுள்ளார் பாவா லட்சுமணன்.
மேலும் அவர் பேசுகையில் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்த அல்வா வாசு உடல் நலம் சரியில்லாமல் மதுரையில் இறந்த போது கூட அவரை நேரில் சென்று பார்க்கவில்லை. அப்போது வடிவேலும் மதுரையில் தான் இருந்தார் என கூறி வருத்தப்பட்டார் பாவா லட்சுமணன். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.