வைகை புயல் வடிவேலு சினிமாவில் இருந்து ஒதுங்கி ஒரு பிரேக் எடுத்து கொண்டு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் வெளியான இந்த முழு நீள காமெடி திரைப்படத்தில் லீட் ரோலில்  நடிகர் வடிவேலு நடித்திருந்தார். இவருடன் ரெடின் கிங்ஸ்லி, சூப்பர்  சிங்கர் சிவாங்கி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, யூடியூபர் பிரஷாந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 


 



ஹீரோவாக கம் பேக் :


நடிகர் வடிவேலு ஹீரோவாக கம் பேக் கொடுத்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தாலும் கலவையான விமர்சனங்களே படத்திற்கு கிடைத்தது; ஊடங்கங்களில் இப்படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களும் வந்தன; இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் வடிவேலு பேசி இருக்கிறார். 


எதிர்மறையான விமர்சனங்களுக்கு கண்டனம்  :


இது குறித்து வடிவேலு பேசுகையில் " ஒரு படம் குறித்து மிகவும் தப்பு தப்பாக பேசுகிறார்கள். இது கண்டிக்கப்பட வேண்டும். என்னுடைய படம் என்பதற்காக மட்டும் அல்ல; எந்த ஹீரோவுடைய திரைப்படமாக இருந்தாலும் இப்படி எதிர்மறையாக விமர்சனங்களை கொடுப்பது தவறு. மக்கள் படத்தை நேரடியாக திரையரங்கத்திற்கு சென்று பார்த்து அவர்கள் படத்தை பற்றி கருத்து கூற வேண்டும். நான் அடுத்த படத்தில் வேறு ஒரு ஹீரோவோடு நகைச்சுவை ட்ராக்கில் சேர்ந்து கொள்வேன்; ஆனால் இந்த படத்தில் தன்னுடைய கடுமையான உழைப்பை போட்ட 150க்கும் மேற்பட்டவர்கள் அப்படியே உடைந்து விடுவார்கள். படம் அவ்வளவு தானா, இனிமேல் வாய்ப்பு கிடைக்காத என நொறுங்கிவிடுவார்கள். 


 


 






 


அரசாங்கத்திடம் கோரிக்கை :



நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் பார்த்த பலரும் என்னிடம் படம் மிகவும் நன்றாக இருக்கிறது. குடும்பத்துடன் சென்று பார்த்தோம் ரசித்தோம் என கூறினார்கள். அப்படி இருக்கையில், விமர்சனம் என்ற பெயரில் படம் வேஸ்ட் என ஒரே வார்த்தையில் அனைவரின் உழைப்பையும் முடித்துவிடுகிறார்கள். மக்கள் இது போன்ற விமர்சனங்களை பார்த்து விட்டு ஒரு படத்தை மதிப்பீடு செய்ய கூடாது. சோசியல் மீடியாவின் வளர்ச்சி நல்லதை மட்டும் அல்ல கெட்ட விஷயங்களையும் பரப்புகிறது; இது போல பொய்யான ஒரு விமர்சனம் கொடுப்பவர்களை அரசாங்கம் தான் கண்டிக்க வேண்டும். இதற்கு தமிழக அரசாங்கமா அல்லது மத்திய சர்க்காரா யாரிடம் வேண்டுகோள் வைக்க வேண்டும் என தெரியவில்லை. இதை யாரிடம் கேட்பது என தெரியவில்லை. ஒரு படம் நன்றாக ஓடும்,ஒரு படம் ஃப்ளாப் ஆகும். அதனால் படத்தின் ஹீரோ, இயக்குனர்களை தப்பு தப்பாக பேசுவது சரியில்லை. சம்பந்தப்பட்டவர்கள் தான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்து இருந்தார் வைகைப்புயல் வடிவேல்.