சசிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி' இணையத் தொடர் ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. தமிழில் உருவான இந்த கிரைம் திரில்லர், உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் தொடரின் சிறப்புகளை பகிர்ந்து கொண்டனர்.

Continues below advertisement

பத்திரிகையாளர் சந்திப்பில் திரண்ட படக்குழு

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் சசிகுமார், யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், தயாரிப்பாளர்கள் புஷ்கர்-காயத்ரி, இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் மற்றும் பிரைம் வீடியோ நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

240 நாடுகளில் வெளியாகும் 'வதந்தி 2'

பிரைம் வீடியோ வழங்கும் இந்த இணையத் தொடர் ஆகஸ்ட் 7 முதல் தமிழில் வெளியாகிறது. அதேசமயம் தெலுங்கு, இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மொழிகளில் சப்டைட்டில்களுடனும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

Continues below advertisement

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் இரண்டாவது சீசன்

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர்கள் புஷ்கர்-காயத்ரி, 'வதந்தி' முதல் சீசன் உருவாகிக் கொண்டிருந்தபோதே இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸிடம் இரண்டாவது சீசனுக்கான யோசனை இருந்ததாக தெரிவித்தனர். முதல் சீசன் ஒரு கதையாகவும், இரண்டாவது சீசன் முற்றிலும் வேறொரு குற்றப் பின்னணியுடனும் இருக்க வேண்டும் என்பதே ஆரம்பத் திட்டம் என அவர்கள் கூறினர்.

மேலும், சீசன் 2-க்காக இயக்குநர் மூன்று கதைகளை எழுதியதாகவும், அவற்றில் இறுதியாக தேர்வு செய்யப்பட்ட திரைக்கதைதான் தற்போது வெளியாக இருப்பதாகவும் தெரிவித்தனர். அதனால்தான் முதல் சீசன் வெளியாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது சீசன் ரசிகர்களைச் சந்திக்கிறது என்றும் விளக்கினர்.

மதுரையை ஆய்வு செய்த இயக்குநர்

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் மதுரையைச் சேர்ந்தவர் இல்லாவிட்டாலும், கதைக்கு இயல்புத்தன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக பல மாதங்கள் மதுரையில் தங்கி மக்களின் வாழ்க்கை முறையை நேரடியாக ஆய்வு செய்து அதன் பிறகே திரைக்கதையை இறுதி செய்ததாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த தொடரில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரமும், பின்னணியும் அந்த ஆய்வின் விளைவாக உருவாகியுள்ளதாகவும், முதல் சீசனைப் போலவே இரண்டாவது சீசனும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையையும் படக்குழுவினர் வெளிப்படுத்தினர்.