எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகியுள்ள வடக்கன் படத்தின் டீசர் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறைவான கூலி பெற்றுக் கொள்வதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இங்குள்ள தொழிலாளர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் இத்தகைய புலம்பெயர் தொழிலாளர்கள் பட்டபாடு நம்  அனைவராலும் மறக்க முடியாத அளவுக்கு இருந்தது. அதேசமயம் வடமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் இடையே தமிழ்நாடு சிறப்பான வாழ்விடம் அளிக்கும் இடமாக பார்க்கப்படுகிறது. 


இந்த நிலையில் “வடக்கன்” என்ற பெயரில் படம் ஒன்று தயாராகியுள்ளது. வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர் பாஸ்கர் சக்தி. இவர் அழகர் சாமியின் குதிரை படத்துக்கு கதை எழுதியிருந்தார். இப்படியான நிலையில் பாஸ்கர் சக்தி வடக்கன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். 


டிஸ்கவரி சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் குங்குமராஜ் முத்துசாமி, வைரமாலா, ரமேஷ் வைத்யா, பிண்டு, வந்தனா என பலரும் நடித்துள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வடக்கன் படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. 






இப்படியான நிலையில் வடக்கன் படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதனை இயக்குநர் லிங்குசாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். இந்த டீசரில் ஹீரோ வடமாநில தொழிலாளியிடம் அடிவாங்கி வந்தது போலவும், அவரால் தன்னுடைய வேலை பாதிக்கப்படுவதை உணர்வதாகவும் காட்சிகள் அமைந்துள்ளது. 


மேலும்,“எங்க பார்த்தாலும் வடக்கன்கள் வேலைக்கு வந்துடுறாங்க.. எல்லா வடக்கன்களையும் அடிச்சி பத்தணும்.. ஒருத்தன் கூட நம்மூர்ல இருக்கக்கூடாது...வெளியூர்ல இருந்து பிழைக்க வந்தவன் இங்குள்ள வடையை சாப்பிட மாட்டானா, அவனுக்காக பானிபூரி, பேல்பூரின்னு போட்டுட்டு இருப்பியா” என வசனங்களும் இடம்பெற்றுள்ளது.