தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில்  வெளியாகியுள்ள படம் ‘வாத்தி’


தனுஷின் வாத்தி:


சென்ற பிப்.17ஆம் தேதி உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் ரிலீசான இப்படம் தனியார்மயமாக்கப்பட்ட, வணிகமயமாக்கப்பட்ட கல்வி, கல்வியின் முக்கியத்துவம் ஆகியவற்றை பேசும் படமாக அமைந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தது. கோலிவுட் சினிமாவில் தனுஷ் முதன்முறையாக இப்படத்தில் பள்ளி ஆசிரியர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ள நிலையில், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.


மேலும், முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், வாத்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிதும் அதிகரித்தது. மேலும் தெலுங்கிலும்ன் சார் எனும் பெயரில் வாத்தி படம் வெளியான நிலையில், ஹைதராபாத்தில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவும் பிரம்மாண்டமான முறையில் நிகழ்த்தப்பட்டு முன்னதாக லைக்ஸ் அள்ளியது.


வசூல் நிலவரம்: 


சுமார் 30 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட வாத்தி படம், வெளியான இரண்டு நாள்களில் 24 முதல் 25 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும் பாசிட்டிவ்வான வரவேற்பைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வந்தன.


இந்நிலையில் தற்போது படம் வெளியாகி ஐந்து நாள்களில் தமிழில் 33 கோடிகள், தெலுங்கில் 22 கோடிகள், வெளிநாடுகளில் 5 கோடிகள் என மொத்தம் 60 கோடி வசூலை எட்டியுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.


இயக்குனர் நம்பிக்கை:


முன்னதாக ஹைதராபாத் ப்ரீ ரிலீஸ்  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய  வெங்கி அட்லூரி "வாத்தி திரைப்படம் வெறும் இரண்டு மூன்று நாட்களில் திரையரங்குகளில் ஓடி செல்லும் ஒரு படம் கிடையாது. மக்கள் மிகவும் நம்பிக்கையுடன் இப்படத்தை பார்க்கலாம். தெலங்கானா மாவட்டத்தில் குறைந்தது 4 வாரங்கள் வெற்றிகரமாகவும் தமிழ்நாட்டில் 8 வாரங்களுக்கும் படம்  வெற்றிகரமாக ஓடும்” என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.


மேலும் வாத்தி பட ப்ரமோஷனுக்காக பத்திரிகையாளர் ஒருவருக்கு வெங்கி அட்லுரி அளித்துள்ள பேட்டி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. “நான் மட்டும் மத்திய கல்வி அமைச்சரானால் இட ஒதுக்கீட்டை நீக்கிவிடுவேன். இட ஒதுக்கீடு என்பது கண்டிப்பாக பொருளாதார அடிப்படையில்தான் இருக்க வேண்டும். சாதி அடிப்படையில் இருக்கக்கூடாது” என்று அவர் அந்த நேர்காணலில் பேசியிருந்தார்.


வெங்கி அட்லுரியின் இந்த பேட்டி கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் பெரும் விவாத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டர்வாசிகள் பலரும் வெங்கி அட்லுரியின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ews இட ஒதுக்கீடு ஏற்கெனவே கடும் எதிர்ப்பைப் பெற்று வரும் நிலையில், வெங்கி அட்லூரியின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் குவித்து வருகிறது.


மேலும் படிக்க: Watch Video : மைம் மூலம் காதலை வெளிப்படுத்திய கோபி... கண்கலங்கிய போட்டியாளர்கள்... களைகட்டிய குக் வித் கோமாளி மேடை