டிண்டர், ஹிங்ஜ் ஆகிய டேட்டிங் ஆப்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவை. இவை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகின்றன. இந்த செயலிகள் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிகள் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இவை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பல அதிரடி சலுகைகளை அளிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக டிண்டர் மற்றும் ஹிங்ஜ் ஆகிய செயலிகள் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இலவசமாக பிரீமியர் வசதிகளை அளிக்க திட்டமிட்டுள்ளன. அத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் பக்கத்தில் ஒரு பேட்ஜையும் அளித்து பெருமைப்படுத்துகின்றன. மேலும் இந்த செயலியின் மூலம் அமெரிக்காவில் தடுப்பூசி தொடர்பான பக்கத்துக்குச் செல்லும் வசதியையும் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செயலிகள் மூலம் அமெரிக்காவில் மேலும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவில் தற்போது வரை 48 சதவிகிதம் பேர் முதல் தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். அத்துடன் 38 சதவிகிதம் பேர் இரண்டு தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் ஜூலை 4-ஆம் தேதிக்குள் 70 சதவிகிதம் அமெரிக்கர்களுக்கு இரண்டு தடுப்பூசியும் செலுத்தப்பட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார். அதற்கு இந்த டேட்டிங் செயலிகளும் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.